புதன், மார்ச் 21, 2012

மோடி குறித்த டைம் கட்டுரை:உண்மைக்கு மாறானது – அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம் கவுன்சில்!


புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி கட்டுரைகளையும், அட்டைப் படத்தையும் வெளியிட்ட டைம் இதழின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லிம்களின் மிகப்பெரிய அமைப்பான இந்திய அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்(IAMC) கூறியுள்ளது.
   
 2002 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோடிக்கு புனிதப் பட்டம் கொடுப்பதற்கான வாடகை லாபிகளின் பிரச்சாரப் பணியின் ஒரு பகுதியாகும் என்று கவுன்சில் கூறியுள்ளது.
ப்ரூக்கிளிங்ஸ் இன்ஸ்ட்யூசன்ஸ் மேனேஜிங் டைரக்டர் மோடிக்கு புகழாரம் சூட்டி கட்டுரையை எழுதிய உடனேயே டைம் பத்திரிகையிலும் இத்தகைய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தனது மோசமான இமேஜை மேம்படுத்தி பிரதமர் பதவிக்கு உயர்த்திக்காட்ட மோடிக்கு வாடகைக்கு பிடித்த வாஷிங்டனில் ‘ஆப்கோ வேல்ட் வைட்’ என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்தின் முயற்சியின் விளைவே இக்கட்டுரை என்று IAMC யின் தலைவர் ஷஹீன் கதீப் கூறியுள்ளார்.
டைம் பத்திரிகையின் செயல் பொறுப்பற்ற பத்திரிகை பணியாகும். குஜராத்தில் தற்போதைய சூழலும், மோடிக்கு எதிரான கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களையும் உட்படுத்தி டைம் இன்னொரு கட்டுரையை வெளியிட வேண்டும். மோடியின் வார்த்தைகளை காப்பியடித்து எழுதியதற்கு பதிலாக குஜராத்தில் மனித உரிமை மீறல்களை குறித்தும், பொருளாதார நிலையைக் குறித்தும் ஆய்வு நடத்தி தங்கள் மீதான நம்பிக்கையை பேணிப் பாதுகாக்க  ’ப்ரூக்ளிங்ஸ் இன்ஸ்ட்யூசன்ஸ்’ தயாராகவேண்டும் என்று IAMC வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக