வியாழன், மார்ச் 22, 2012

டெல்லி போலீஸின் போலியான போலீஸ் ஸ்டோரி! – போலீஸ் பிடித்த பயங்கரவாதி – நிரபராதி என நீதிமன்றம்!


 புதுடெல்லி:குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்து பயங்கரவாத முத்திரைக் குத்தும் சட்டத்தின் காவலர்களின் பொய்யான முகமூடி மீண்டும் ஒருமுறை அவிழ்ந்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலைச் செய்ய பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதி என்று பொய் வழக்கை ஜோடித்து சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் – நிரபராதியான இந்திய குடிமகன் என்று டெல்லி தீஸ்ஹஸாரி சீஃப் ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவுதான் இம்ரானின் மீது பொய் வழக்கை சுமத்தியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்ரான் செவ்வாய்க்கிழமை அலங்கோலமான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை போலீசார் மிருகத்தனமாக சித்திரவதைச் செய்ததாக இம்ரான் கண்ணீர் மல்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாடே உற்றுநோக்கும் இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையின் வாதத்தை கேட்க காத்து நின்று கொண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி நீங்களும்அறிந்து கொள்ள வேண்டிய வழக்கு இது என்று நீதிபதி வினோத் யாதவ் கூறினார்.
அப்பாவியான இம்ரான் தனது கதையை கூறியதாவது: நான் குஜராத்தில் இருந்து கராச்சிக்கு சென்ற துணி வியாபாரி ஆவேன். குஜராத்தில் இருந்து கராச்சிக்கு சென்ற பிறகு வியாபாரத்தை துவக்கினேன். வியாபாரம் செய்வதற்காக பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை எடுத்தேன். கராச்சியைச் சார்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்தேன். இது தான் நான் செய்த குற்றம். இதற்கு நான் தண்டனையை பெற தயார்.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனியில் எனக்கு சொந்த அலுவலகங்கள் இருந்தன. 180 தடவை வியாபார விஷயமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால், 2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து துணி வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள எனது நண்பர்கள் இந்தியாவில் உள்ள பருத்தித் துணிகளுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நான் இந்தியா வந்து குடியுரிமைக் கோரி விண்ணப்பித்தேன்.
2009-ஆம் ஆண்டு குஜராத் அரசு மூலமாக இந்த விண்ணப்பத்தை அளித்தேன். ஆனால், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிகளுக்கு விசா மறுக்கப்பட்டதால் எனக்கு சிரமமானது. எனக்கும், எனது பாகிஸ்தானைச் சார்ந்த மனைவிக்கும் இந்தியா வர இயலாததால் நேபாளத்திற்கு சென்று வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளை துவக்கினேன்.
நேபாளில் இருந்து குஜராத்தில் எனது வீட்டினரை அழைத்து இதுத்தொடர்பாக பேசினேன். அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு நான் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என குற்றம்சாட்டி நவம்பர் மாதம் நேபாளத்தில் இருந்து என்னையும், எனது மனைவியையும் கைது செய்து அழைத்து வந்தார்கள். பின்னர் ஒருமாதம் கழிந்து குஜராத் முதல்வர் மோடியை கொலைச் செய்ய வந்த பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி கைதை பதிவுச் செய்தனர். இவ்வாறு இம்ரான் கூறினார்.
‘எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்த நாங்கள் தற்பொழுது சமையல் செய்ய மண்ணெண்ணெய் கூட வாங்க முடியாத துயரத்தில் உள்ளோம்’ என்று இம்ரானின் தந்தை யூசுஃப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிறந்த மண்ணில் வாழ வந்த இந்திய குடிமகனை டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு மோடியை கொலைச் செய்ய வந்த பயங்கரவாதியாக மாற்றிவிட்டது என குற்றம் சாட்டிய நீதிபதி வினோத்யாதவ், இம்ரானுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க ஜாமீன் வழங்கினார். பின்னர், இம்ரானின் வழக்கை மனிதநேயத்தின் அடிப்படையில் எடுத்து வாதாட யார் தயார்? என்று நீதிபதி அங்கிருந்த வழக்கறிஞர்களை பார்த்து கேட்டார். அப்பொழுது சுனில்திவாரி என்ற வழக்கறிஞர் இம்ரானுக்காக வாதாட முன்வந்தார்.
குடியுரிமை பெறுவதற்கான ஆவணங்களை எடுக்க குஜராத்திற்கு செல்லும் வேளையில் மீண்டும் போலீஸ் கடத்திச்செல்ல வாய்ப்புள்ளதால் ஏதேனும் ஆவணத்தை அளிக்குமாறு இம்ரான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவரிடம் நீதிபதி வினோத் யாதவ், நீதிமன்றம் ஆவணத்தை அளிக்கும் என்று உறுதி அளித்தார்.
இஸ்ரேல் கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக  பிரபல பத்திரிகையாளர் முஹம்மது அஹ்மத் கஸ்மியை கைது செய்து சர்ச்சையில் சிக்கிய டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் மற்றொரு பயங்கரவாத கதை கஸ்மியின் வழக்கில் விசாரணை நடைபெறும் அதே நீதிமன்றத்தில் எதேச்சையாக பொய் என நிரூபணமானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக