திங்கள், மார்ச் 26, 2012

"மிரட்டலால் சாதிக்கலாம் என நினைக்காதே': வடகொரியாவிற்கு ஒபாமா!


சியோல்: சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டிற்காக, தென் கொரியாவிற்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மிரட்டல்களால் எதையும் சாதிக்க முடியாது என, வடகொரியாவை எச்சரித்துள்ளார்.


தென் கொரியத் தலைநகர் சியோலில், இன்றும் நாளையும் சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 53 நாடுகளின் தலைவர்கள் சியோலுக்குச் சென்றுள்ளனர். சியோல் சென்ற ஒபாமா, முன்னதாக, தென் கொரியா, வடகொரியா இடையிலான ராணுவம் புகக் கூடாத பகுதிக்கு சென்றார். அங்கு, அமெரிக்காவின் படைமுகாமில் உள்ள வீரர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, சியோலில், தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக்கைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அளித்த பேட்டியில், "வடகொரியாவிற்கு தனது கடமைகள் என்னவென்று தெரியும். அதை, சரியான நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்ற வேண்டும். மாறாக, மிரட்டல்கள் விடுப்பதன் மூலமோ, அண்டை நாட்டைத் தூண்டி விடுவதன் மூலமோ, எதையும் சாதிக்க முடியாது' எனத் தெரிவித்தார். இதற்கிடையில், அடுத்த மாதம், 12 முதல் 16ம் தேதிக்குள் ஒருநாள், வடக்கு பியான்கன் மாகாணத்தில் உள்ள டோங்சங் ரி என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோளை ஏவுவதில், வடகொரியா தீர்மானமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட்டின் முக்கிய பாகம் ஒன்று, டோங்சங் ரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக, தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவும் கண்டனம்: பிரதமர் மன்மோகன் சிங், தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக் இருவரும் சந்தித்துப் பேசிய பின் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில்,"கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும். ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களை மீறுவதன் மூலமோ, இந்த மண்டலத்தில் பதட்டத்தை அதிகரிப்பதாலோ, எதையும் செய்து விட முடியாது' எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக