புதன், மார்ச் 21, 2012

நாங்கள் கைது செய்யப்பட்டாலும் எங்கள் குழந்தைகள் போராடுவார்கள் – கூடங்குளம் உதயகுமார் !

இடிந்தகரை : கூடங்குளம் தொடர்பாக எந்நேரமும் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பான சூழலில் தாங்கள் கைது செய்யப்பட்டாலும் தங்களது அடுத்த தலைமுறை போராடும் என்று போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியிருக்கிறார்.
கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம் 218ம் நாளாக தொடரும் நிலையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு பின் ஆயுதம் தாங்கிய காவலர்கள் குவிக்கப்பட்டு சிவசுப்ரமணியம்
உள்ளிட்ட போராட்டகுழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏதேனும் கலவரம் ஏற்படும் சூழல் உருவானால் அதை காரணமாக வைத்து உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயகுமார் முதல்வர் தம்மோடு நடத்திய பேச்சுவார்த்தையின் போது மக்களுடன் தாம் இருப்பதாக நம்பிக்கையளித்தவர் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் கூடங்குளம் பகுதிக்கு 500 கோடி ஒதுக்கியுள்ளது மக்களை விலைக்கு வாங்கும் முயற்சி என்றும் கூறினார்.
ஐ.நாவில் இலங்கையை எதிர்த்து ஒட்டு போட மத்திய அரசு முடிவு செய்த அதே நாளில் தமிழக அரசின் முடிவு நேரெதிரானது என்று கூறிய உதயகுமார் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பு உருவான அதே நாளில் இந்திய தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழக அரசு போராடும் அனைத்து மக்களையும் கைது செய்தாலும் தங்களின் அடுத்த தலைமுறையான தங்களின் குழந்தைகள் அணு உலைக்கு எதிராக போராடுவார்கள் என்று தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக