ஞாயிறு, மார்ச் 25, 2012

7-வது நாளாக கூடங்குளம் உண்ணாவிரதம்: பல தலைவர்கள் கைது!


திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தும் உண்ணாவிரதம் 7-வது நாளை எட்டியுள்ளது. இடிந்த கரையில் போராட்ட பந்தலில் நேற்று மருத்துவர்கள் குழு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பரிசோதனை நடத்தியது.
  அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை சீர்கெட்டால் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-ரஷ்யா கூட்டு அணுசக்தி திட்டமான கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க அனுமதி வழங்கி கடந்த 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
அணுமின்நிலையத்தின் பாதுகாப்புக் குறித்து பீதியடைந்த சுற்றுவட்டார மக்கள் போராட்டம் துவக்கியதை தொடர்ந்து கூடங்குளம் அணுமின்நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. அன்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசிய முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தலுக்கு பிறகு தனது முடிவில் பல்டி அடித்தார்.
அதேவேளையில், கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுச் செய்தார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே போலீஸார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டம்-ஒழுங்கு சீரானால் போலீஸார் வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசத்துரோகம், தேசத்திற்கு எதிராக போர் செய்தல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள உதயகுமாரை கைது செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ், தற்பொழுது அதுப்பற்றி கூறவியலாது என்று தெரிவித்தார்.
தடை உத்தரவை மீறி இடிந்தகரையில் நுழைய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவை விருதுநகரில் வைத்து போலீஸ் கைது செய்தது. திருமண நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த தமிழக இளைஞர் எழுச்சிப்பேரவை தலைவர் சதீஷையும் போலீஸ் கைது செய்தது. நேற்று முன் தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய வைகோ, சீமான், நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக