சனி, ஏப்ரல் 07, 2012

பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல முயற்சித்த கப்பல் பாறையில் மோதி சிக்கியது !

Aqua Queen ship troubled when crossing Pamban bridgeபாம்பன் பகுதியில் கடலில் மிதவை தொடர்பான சமிக்ஞை இல்லாததால், ரயில் பாலத்தைக் கடந்து செல்ல முயற்சித்த கப்பல் பாறையில் மோதி சிக்கிக்கொண்டது. சுமார் 4 மணி நேரம் போராடி அக் கப்பலை துறைமுக அதிகாரிகள் மீட்டனர். பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தின் அடியில் தினமும் சரக்கு மற்றும் மிதவைக் கப்பல்கள் கடந்து செல்கின்றன. பாலம் அமைந்துள்ள பகுதியில் பாறைகள் நிறைந்துள்ளதால், கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் கடலில் பாதை உருவாக்கி
இருந்தனர்.

இப் பாதையை கப்பல் கேப்டன்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கடலில் மிதவைகள் (போயா) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு மிதவைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பாலத்தைக் கடந்து செல்லும் பல கப்பல்கள் பாறை மீது மோதியும், தரை தட்டியும் நின்றுவிடுகின்றன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட "அக்வா குயின்' எனும் கப்பல், மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவுக்குச் செல்ல ஏப்ரல் 4-ம் தேதி பாம்பன் தென்கடலுக்கு வந்தது. இக் கப்பலில் கேப்டன் உள்பட 12 மாலுமிகள் பணியில் இருந்தனர். 120 அடி நீளமும், 1,190 டன் எடையுள்ள இக் கப்பல் வெள்ளிக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் அமைந்துள்ள கெட்ஜர் தூக்குப் பாலத்தைக் கடந்து சென்றது.

சில நிமிடங்களில் வழி தவறிச் சென்ற அக் கப்பல் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் நுழைந்து, பாறையொன்றின் மீது மோதி நின்றது. கப்பலை மீட்கும் பணியில் பாம்பன் துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பல் மாலுமிகள் இணைந்து முயற்சித்தனர்.

சுமார் 4 மணி நேரம் போராடி கப்பலை மீட்டு, பாம்பன் தென் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவைத்தனர். சனிக்கிழமை (ஏப்ரல் 7) காலை கடலில் நீர்மட்டம் உயர்ந்தவுடன், "அக்வா குயின்' கப்பல், ரயில் பாலத்தைக் கடந்து கொல்கத்தா நோக்கிச் செல்லவுள்ளதாக பாம்பன் துறைமுக அதிகாரி மாரிச்செல்வம் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக