சனி, ஏப்ரல் 14, 2012

போலி என்கவுண்டர் விசாரணை: அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


புதுடெல்லி:கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் நடந்த என்கவுண்டர்கள் குறித்து சுதந்திர விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை மனுவில் உச்சநீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுக்குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில போலீசாரை குற்றம் சுமத்தும் நோக்குடன் அவர்கள் போலி என்கவுண்டரை நடத்துவதாக சிலர் வேண்டுமென்ற குற்றம் சுமத்துவதாகவும், போலீசாரை பழிவாங்கும் நோக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய குஜராத் அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த எல்லா என்கவுண்டர் வழக்குகளையும் விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகளான, அஃப்தாப் ஆலம், ரஞ்சன் பிரகாஷ் ஆகியோர் போலி என்கவுண்டர் புகார்களை விசாரிப்பது தொடர்பாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
முன்னதாக, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை  நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரி பிரபல பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ், திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர்(முஸ்லிம்கள்) மீது குறிவைத்து போலி என்கவுன்ட்டர் நடத்தப்படுவதாகவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், 22 போலி என்கவுண்டர் புகார்களை விசாரிக்க தனி கண்காணிப்பு அமைப்பை அமைக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தனி கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ்.பேடியை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தம் மீதான குற்றங்களை திசை திருப்பவே குஜராத் அரசு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக