ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

உண்ணாவிரதப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் ! உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு !

தோஹா: கடந்த சனிக்கிழமை (14.04.2012) கட்டார் தலைநகர் தோஹாவில் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம் சார்பில் இடம்பெற்ற மாநாட்டில் ஏராளமான பலஸ்தீன் ஆதரவாளர்கள் ஒன்றுகூடினர். காஸாவில் உள்ள மேற்படி அமைப்பின் கிளை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் இடம்பெற்றுவரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமை (16.04.2012) நோன்பு இருக்க முன்வருமாறு உலக முஸ்லிம்களை நோக்கி
அழைப்பு விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சுமார் 60,000 இஸ்லாமிய அறிஞர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மேற்கொண்டுவரும் அராஜகங்களுக்கு எதிரான அனைத்துவித முன்னெடுப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்து, பலஸ்தீனர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், தோஹாவில் ஒழுங்குசெய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு, "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராய் சாத்வீகமான போராட்டத்தில் இறங்கியிருக்கும் பலஸ்தீன் சகோதர சகோதரிகளுக்கு நமது ஆதரவைத் தெரிவித்து, அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்த முன்வாருங்கள்" என மேற்படி அமைப்பின் துணைத் தலைவர் கலாநிதி அலி முஹியித்தீன் குரா தாகி உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகத்துக்கு எதிராய் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகள் பலரின் உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,பலஸ்தீன் மக்களின் அமைதிப் போராட்டத்தின்பால் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான பல்வேறு முன்னெடுப்புகள் உலகளாவிய ரீதியில் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக