திருவனந்தபுரம்:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வெகுஜன மக்கள் இயக்கம் தொடர்ந்து போராடும் என்று சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். கூடங்குளம் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தபிறகு திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர். சுமத்ராவில் உருவான பூகம்பம் கேரளா-தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அழிவை உருவாக்கும் சூழலில்
கூடங்குளம் அணுமின்நிலையம் ஆபத்தானது. அணுமின்நிலையத்தை நிறுவியதன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. எல்லாம் ரகசியமாக நடந்தேறியுள்ளது.
லோக்பால் போன்ற அமைப்பால் இத்தகைய ஊழலை ஒன்றும் செய்ய இயலாது. மக்களுக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தால் அணுமின் நிலைய விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது. மக்கள் சொந்த பூமியில் அமைதியுடன் வாழ்வதற்காகவே அங்கு போராடுகின்றனர். இது அவர்களின் அரசியல் சாசன ரீதியான அடிப்படை உரிமையாகும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சுதந்திரமான பிரபல அறிவியல் நிபுணர்களின் குழு கூடங்குளம் சென்று பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டும். இவர்கள் மக்களுடன் உண்மை நிலைக் குறித்து கலந்துரையாட வேண்டும்.
இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பில் கிராம சபையின் அனுமதி வாங்கிய பிறகே அணுமின்நிலையத்தை நிறுவ முடியும்.
சொந்தநாட்டில் நடைமுறைப்படுத்த முடியாத அணுமின்நிலையத்தை ரஷ்யா கூடங்குளத்தில் செயல்படுத்துகிறது. செர்ணோபில் அணு உலை விபத்திற்கு பிறகு ரஷ்யா சொந்த நாட்டில் அணுமின் நிலையத்தை நிறுவவில்லை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளும் ரஷ்யாவின் வழியை கடைப்பிடிக்கின்றன. அந்த நாடுகளில் செயல்படும் பல அணுமின்நிலையங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் பூட்டப்பட்ட அணுமின்நிலையங்களை இந்தியாவுக்கு கொண்டுவருகின்றன. ஆகையால் அமெரிக்காவும், பிரான்சும் இந்தியாவில் அணுமின்நிலையங்களை நிறுவ தயாராக இருக்கின்றன. சொந்த நாடுகளில் பூட்டப்பட்ட அணுமின் நிலையங்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதன் பின்னணியில் உயர்மட்ட அளவில் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கலாம்.
நாட்டின் பல பிரபல விஞ்ஞானிகள் அணுமின் திட்டம் குறித்தும், திட்டம் அமல்படுத்தப்படும் பகுதியைக் குறித்தும் கவலைத் தெரிவிக்கின்றனர். ஆனால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இரண்டு மணிநேரம் கூடங்குளம் அணுமின்நிலையத்தை சுற்றிப் பார்த்துவிட்டு முற்றிலும் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். அவ்வேளையில் அவசர அவசரமாக நற்சான்றிதழ் வழங்கியதற்கு தூண்டுகோலாக அமைந்தது எது? என்பது குறித்து புரிந்துக்கொள்ள முடியவில்லை.
கூடங்குளம் ஒப்பந்தத்தின் பின்னணியில் என்னவோ நடந்துள்ளது. அதனை கண்டுபிடிக்க வேண்டும். கூடங்குளம் தொடர்பான அனைத்து விபரங்களையும் அரசு ரகசியமாக வைத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தால் இவ்விவகாரத்தில் எவ்வித பயனும் இல்லை. பாதுகாப்பான, அமைதியான திட்டம் என்றால் ஏன் இவ்வளவு தூரம் ரகசியத்தை பேணவேண்டும்?
நேற்று முன் தினம் நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் கூடங்குளம் மக்களுக்கு மட்டும் எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. அங்கு சென்றபொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பூகம்பம் தொடர்பான செய்தி தவறா? என்று கூட சந்தேகித்தேன். அவ்வளவு தூரம் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அரசும், அதிகாரிகளும் நடந்துகொண்டனர். இது வேண்டுமென்றே நடந்ததா? என்பது குறித்து சந்தேகம் எழுகிறது.
போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய அளவில் பிரச்சாரம் நடத்தப்படும். இவ்வாறு சுவாமி அக்னிவேஷ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக