வெள்ளி, ஏப்ரல் 06, 2012

ஒரிசா:கடத்தப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் இத்தாலிய சுற்றுலா பயணியை மீட்க 27 மாவோயிஸ்ட்கள் விடுதலை


புவனேஸ்வர்:மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் இத்தாலியரை விடுவிப்பதற்காக சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ள 27 மாவோயிஸ்ட்களின் பெயர்களை ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். அதே நேரம், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு விதித்த கெடுவை நாளை வரை மாவோயிஸ்ட்கள் நீட்டித்துள்ளனர்.

ஒரிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த எம்எல்ஏ ஜினா ஹிகாகா, இத்தாலி சுற்றுலா பயணி பாசிஸ்கோ 2 வெவ்வேறு நக்சலைட் இயக்கங்கள் கடத்தி வைத்துள்ளன. இவர்களை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களை விடுவிக்கும்படி அரசுக்கு மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே பலமுறை கெடு விதித்தனர். இந்த கெடுவை நேற்று மாலை வரை நீட்டிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.
அதற்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், பின்விளைவு கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தனர். மேலும், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்தனர்.
மாவோயிஸ்ட்களின் பிடி இறுகியதை தொடர்ந்து, மாவோயிஸ்ட்களின் கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார். அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்ட்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 27 பேரை விடுவிப்பதாக அறிவித்தார். விடுதலை செய்யப்பட உள்ளவர்களின் பட்டியலை நேற்று முடிவு செய்த அவர், அதை சட்டப்பேரவையில் அறிவித்தார். விடுதலை செய்யப்பட உள்ள 27 பேரில் 15 பேர், மாவோயிஸ்ட் ஆதரவு இயக்கமான சாசி முலியா ஆதிவாசி சங்கத்தை சேர்ந்தவர்கள். 8 பேர் மாவோயிஸ்ட்கள். மேலும், 4 பேர் ஒரிசா மாநில இந்திய கம்யூனிஸ்ட்  அமைப்பு குழுவை சேர்ந்தவர்கள்.
விடுதலை செய்யப்பட உள்ள 8 மாவோயிஸ்ட்களில் 6 பேர் ஒடிசாவையும், 2 பேர் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிப்பதற்காக சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பேரவையில் பட்நாயக் கூறினார். இந்த நிலையில், கோரிக்கையை ஏற்பதற்காக ஒடிசா அரசுக்கு விதித்த கெடுவை நாளை வரை நீட்டிப்பதாக மாவோயிஸ்ட்கள் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு செல்போனில் மாவோயிஸ்ட்கள் தகவல் தெரிவித்தனர். இந்த செல்போன் எம்எல்ஏ ஹிகாகாவுக்கு சொந்தமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக