திங்கள், பிப்ரவரி 20, 2012

பிரிட்டன், பிரான்சுக்கு பெட்ரோல் தர முடியாது : ஈரான் !

சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள், இந்த வாரத்தில் ஈரானுக்கு செல்ல உள்ள நிலையில், அந்நாடு தனது அணுசக்தி நிலையம் ஒன்றில், யுரேனியம் செறிவூட்டலை மும்மடங்கு செய்யவல்ல நவீன ரக கருவிகளை நிறுவும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மேற்குலகம் மற்றும் அமெரிக்காவால்
சந்தேகத்தோடு பார்க்கப்படும் நிலையில், அவை குறித்து ஆராய்வதற்காக, இந்த வாரத்தில் ஐ.ஏ.இ.ஏ., பிரதிநிதிகள் குழு ஒன்று ஈரானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.கடந்த மாதம், இக்குழு ஈரானுக்கு சென்றிருந்த போது, சில அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. இம்முறை தடை செய்யப்பட்ட நிலையங்களிலும், இக்குழு ஆய்வு செய்யக் கூடும்.யுரேனியம் செறிவூட்டலை மும்மடங்கு நடத்தும் நவீன ரக கருவிகள் உட்பட, அணுசக்தி தயாரிப்பில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் மூலம் பலமடங்கு முன்னேறியிருப்பதாக, சமீபத்தில் ஈரான் அறிவித்தது. இதையடுத்து, சர்வதேச அளவில் ஈரான் மீதான பதட்டம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து 156 கி.மீ., தென்மேற்கில் உள்ள கோம் நகரின் போர்டோ பகுதியில் இயங்கி வரும் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில், நவீன ரக கருவிகளை நிறுவும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நேற்று முன்தினம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என்பதால், அந்நாட்டின் மீது சர்வதேச சமூகம் கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பிரிட்டன், பிரான்சுக்கு எண்ணெய் நிறுத்தம்:ஈரான் மீதான அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டதாக, ஈரான் எண்ணெய் அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த வாரம் நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஆறு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை, ஈரான் நிறுத்தி விட்டதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், அந்நாட்டின் எண்ணெய் அமைச்சகம் அதை மறுத்து விட்டது.இந்நிலையில் ஈரான் தேசிய தொலைக்காட்சி, நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆறு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம் என்ற முடிவின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக