புதன், பிப்ரவரி 29, 2012

இத்தாலி சொகுசு கப்பலில் தீ விபத்து 1050 பயணிகள் கதி என்ன?

 தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 பேர் பயணிகள். 413 பேர் கப்பல் ஊழியர்கள்.  செசெல்ஸ் தீவு அருகே சென்றபோது கப்பலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்தது. எனவே கப்பலில் உள்ள மின் விளக்குகள், ஏர்கண்டிஷன், அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் என அனைத்து சாதனங்களும் செயல் இழந்தன. இதனால் கப்பல் இருளில் மூழ்கியது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து பயணிகளும் ஊழியர்களும் தவிப்புக்குள்ளானார்கள்.  இதுகுறித்து இத்தாலி கடற்பாதுகாப்பு படைக்கு கப்பல் கேப்டன் தகவல் கொடுத்தார். 

இதையடுத்து மீன்பிடி படகுகளும், கடற்படை ரோந்து கப்பல்களும் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையே கப்பல் ஜெனரேட்டர் அறையில் பிடித்த தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போது, கப்பலில் பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும் மீட்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இத்தாலியின் கோஸ்டாகன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் விபத்துக்குள்ளாகி 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக