திங்கள், பிப்ரவரி 27, 2012

வரி ஏய்ப்பிலும் பல ஆயிரம் கோடி பார்த்திருக்கும் 2ஜி நிறுவனங்கள் !

Vodafone
 டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களில் சில மோரிஷஸ் நாட்டு பதிவைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்திருப்பதால், வரி ஏய்ப்பு மோசடியை எப்படி தண்டிப்பது, வரியை எப்படி வசூலிப்பது என்று வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

மோசடி எப்படி?

இந்தியாவில் தொழில் செய்யும் "டெலிகாம்' நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை, மூலதன ஆதாயமாகக் கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது. ஆனால் 2ஜி சேவை அளிக்க உரிமம் பெற்றுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றின் பணப் பரிமாற்றங்கள் வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. அவை மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு இந்திய அரசின் வரிவிதிப்பு எல்லையைத் தவிர்க்கின்றன.

அதுமட்டும் அல்லாமல், மோரிஷஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பங்குகளின் உரிமையை மாற்றிக் கொண்டும், பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பதாகக் கணக்கு காட்டியும், ஏற்கெனவே வாங்கிய கடன் மீது மேலும் கடன் வாங்கியதைப்போல கணக்கு கொடுத்தும், அடித்தளக் கட்டமைப்புக்குச் செலவிட்டதைப்போல கணக்கு எழுதியும் வரி செலுத்துவதைத் தவிர்க்கப் பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வோடஃபோன் வழக்கு

வோடஃபோன் வருமான வரி பாக்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அளித்துள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வருமான வரித்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.

அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த நிறுவனங்களின் உத்தியை விளக்க முடிவு செய்துள்ளது துறை. சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் இதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி ரூபாய் வருமான வரி கிடைக்காமல் போனதல்லாமல், பிற நிறுவனங்களும் அதே வகையில் சொல்லி வரி செலுத்தாமல் தப்பித்துவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக