சனி, பிப்ரவரி 25, 2012

சென்னை வங்கி கொள்ளையர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் ஒருவர் உயிருடன் இருக்கிறார் !

சென்னை வங்கி கொள்ளையர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் ஒருவர் உயிருடன் இருக்கிறார்: போலி டிரைவிங் லைசென்சால் பரபரப்புசென்னையில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்கள் வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் பலி ஆனார்கள்.
 
அவர்களில் சந்திரிகா ரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், வினோத்குமார் ஆகிய 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அபய்குமார் என்பவன் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்களில் ஒருவனான சந்திரிகா ரே, பீகாரில் உள்ள தனது சொந்த ஊரில் உயிரோடு இருப்பதாக நேற்று காலையில் இருந்தே தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பரபரப்பாக செய்தி வெளியானபடி இருந்தது.
 
போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சந்திரிகா ரேயின் தந்தை பெயர் கிரிப்பாலிரே என்றும், பீகார் மாநிலம் பத்துஹா மாவட்டம், மாஜிப்பூர்ரைச் சேர்ந்தவன் என்றும் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
 
ஆனால் அந்த முகவரியில் வசிக்கும் சந்திரிகா ரே என்பவர் உயிரோடு இருப்பதாகவும், அவர் லாரி டிரைவராக இருப்பதாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரது தந்தை பெயரும், போலீசார் வெளியிட்ட தந்தை பெயரும் ஒன்றுதான்.
 
சந்திரிகா ரே உயிரோடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சந்திரிகா ரேயின் டிரைவிங் லைசென்சை வைத்துதான், அவனது தந்தை பெயர் மற்றும் சொந்த ஊர் முகவரியை கொடுத்தோம். இப்போது அது போலியானது என்று தெரிய வந்துள்ளது.
 
எனவே, அவனது உண்மையான முகவரியை சேகரிக்க பீகார் மாநில போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். டிரைவிங் லைசென்சில் போலியான பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக