சென்னை:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் குறித்து கொச்சைப்படுத்தி பேசிய பிரதமர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்போவதாக அணு உலை எதிர்ப்பு குழு தலைவர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார் சென்னையில் நேற்று(சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வெளிநாடுகளிலிருந்து எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு எனது வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதற்கு இப்போது நாராயணசாமி பதில் அனுப்பியுள்ளார்.
என்னை அவதூறு செய்யும் விதத்தில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று அந்தக் கடித்தில் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே நாட்டில் உள்ள சிந்திக்கும் திறன் மிகுந்த மக்கள் கூடங்குளம் அணு மின் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்று கூறி, அந்த மக்களையும், அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் பிரதமர் கொச்சைப்படுத்தியுள்ளார். இது தவிர எங்களுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நான் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருக்கிறார்.
உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி, அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களையும், என்னையும் அவதூறு செய்யும் விதத்தில் பேசியதற்காக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன் என்று உதயகுமார் கூறினார்.
பேட்டியின்போது பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக