வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் கேட்கிறது !

டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிடமிருந்து கூடுதலாக 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கொடுக்குமாறு இந்தியா கோரியிருக்கிறது. சவூதி அரேபியாவின் பெட்ரோலியத் துறை துணை அமைச்சர் அப்துல் அஜிஸ் பின் சல்மானுடனான சந்திப்புக்குப் பிறகு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் இதனைத் தெரிவித்தார்.

ஈரானிடமிருந்தே இந்தியாவின் தேவைக்கான கச்சா எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்த நிலையிலும் கூட அமெரிக்காவில் பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சவூதி அரேபியாவிடம் இந்தியா விடுத்துள்ள வேண்டுகோளானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக சவூதி அமைச்சர் கூறுகையில், நாளொன்று 9.8 மில்லியன் பேரல்கள் தற்போது உற்பத்தியாகிறது. இதில் 2.5 மில்லியன் பேரல்கள் உபரியானவை என்று கூறியுள்ளார்.

ஈரான், ஈராக், நைஜீரியாவைத் தொடர்ந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று.

ஆண்டொன்றுக்கு சவூதி அரேபியாவிடமிருந்து 27 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக