செவ்வாய், பிப்ரவரி 28, 2012

மீடியாக்கள் மீது கிங்ஃபிஷர் தலைவர் விஜய் மல்லையா கடும் தாக்கு !

King Fisher MD Vijay Mallaiya condemned to media.கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ளது என்னை தனிப்பட்ட முறையில் வேதனைப்பட வைத்துள்ளது. இதை சரி செய்யவும், நிதியாதாரங்களைத் திரட்டவும் ஏற்பாடு செய்து வருகிறேன். ஆனால் இந்த விவகாரத்தை மீடியாக்கள் அணுகும் முறை பொறுப்பற்றதாக உள்ளது என்று கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.


கிங்பிஷர் நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. சம்பளப் பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமானோர் கம்பெனியை விட்டு விலகி வருகின்றனர். இதனால் தனது விமான சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது கிங்பிஷர். பல விமானங்களை அது ரத்து செய்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார் மல்லையா. அதில் சம்பளப் பாக்கி குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பளப் பாக்கி அதிகரித்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் வேதனை தருகிறது. இருப்பினும் நிதியாதாரங்களை நான் ஏற்பாடு செய்து வருகிறேன்.

வருமான வரித்துறையினர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதால்தான் நிறுவனம் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் நான் மீடியாக்கள் குறித்தும் சொல்ல வேண்டியுள்ளது. நிறுவனத்தின் துயரங்கள் குறித்து மீடியாக்களும், காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் மீடியாக்களும் பொறுப்பே இல்லாமல் அணுகுகின்றன. அவர்கள் சொல்லும் செய்திகளில் பாதி கதை, மீதிதான் உண்மை. நினைத்தபடி எழுதுகிறார்கள். தங்களது சுயலாபத்திற்காக, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பொய்யைக் கலந்து எழுதுகின்றனர்.

நிறுவனத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வே இல்லாமல் தொடர்ந்து முயன்று வருகிறேன். தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்த வாரத்திற்குள் எனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

வரிகள் முழுவதையும் கட்ட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதேபோல சம்பளப் பாக்கியையும் நாங்கள் முழுமையாக சரி செய்து விடுவோம்.

பொது நலனைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். நிறுவனத்தின் தற்போதைய சிக்கலான நிலையிலும் எங்களுடன் துணை நிற்கும் அனைவருக்கும் உரிய கெளரவத்தையும், பரிசையும் நான் அளிப்பேன். உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் செயல்படும் யாரையும் நான் கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார் மல்லையா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக