ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒழுக்கக் கேடானது என்று கடந்த வாரம் மத்திய உள்துறை சார்பில் வக்கீல் தெரிவித்த நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார துறை வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். அரசு திடீர் பல்டி அடித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். இந்த நிலையில், ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘ஒரே பாலினத்தை
சேர்ந்த 2 பேர் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது'' என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், ''ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது. இது, இயற்கை கொள்கைக்கு எதிரானது‘ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சிங்வி, முகோத்பாத்யா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ரா ஆஜரானார். அவர், தனது வாதத்தில், ‘‘ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒழுக்கக் கேடானது. மேற்கத்திய நாடுகளின் கலாசாரம், பழக்க, வழக்கங்கள் நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்காது. இதுபோன்ற பழக்கத்தால் எய்ட்ஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.‘ என்று கூறினார்.
ஆனால், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது இல்லை என்று மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ள நிலையில், மல்கோத்ரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று மத்திய உள்துறை அவசரமாக மறுத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதார துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஜெயின் ஆஜரானார். அவர் வாதாடுகையில்,‘‘ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டப்படி தவறு ஆகாது என்பது மத்திய அரசின் நிலை‘‘ என்றார்.
மத்திய உள்துறை சார்பில் ஆஜரான மல்கோத்ரா கூறிய கருத்துக்கு நேர் எதிரான கருத்தை மோகன் ஜெயின் கூறியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் கண்டனம் தெரிவித்தனர். இது பற்றி நீதிபதிகள் கூறுகையில்,‘‘ஏற்கனவே, ஓரினச்சேர்க்கைக்கு எதிராக உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான மல்கோத்ரா 3 மணி நேரம் வாதிட்டார். அதை குறித்துக் கொண்டோம். இப்போது, அது தவறு இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீதிமன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கேலிக்கூத்தாக்குகிறது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்‘‘ என்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு கேலிக்கூத்தாக்குகிறது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக