செவ்வாய், பிப்ரவரி 21, 2012

விஜயகாந்த்துக்கு 'டபுள் ஆக்ட்'-தேமுதிகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு !

 சென்னை: சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடந்த தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை தலைவர் பொறுப்பை மட்டுமே விஜயகாந்த் வகித்து வந்தது நினைவிருக்கலாம். தற்போது பொதுச் செயலாளர் பொறுப்பையும் அவரே வகிக்கவுள்ளார்.

கட்சி ஆரம்பித்ததிலிருந்து தனித்து போட்டியிட்டு வந்தது தேமுதிக. மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் தேவையில்லாத போராட்டங்களை நடத்தாமல், செயல்பட்டு வந்ததால் தேமுதிகவுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் போல மக்கள் கூட ஆரம்பித்தனர். வித்தியாசமான அரசியல்வாதி என்ற பெயரையும் விஜயகாந்த் பெற்றார்.இதனால் அவருக்கென தனி வாக்கு வங்கியும் உருவானது.

ஆனால் வாக்கு வங்கி நிலைப்பட்டதுமே கூட்டணி அரசியலுக்குத் தாவி விட்டார் விஜயகாந்த். கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த கூட்டணியால் அதிமுகவுக்குக் கிடைத்த பலத்தை விட தேமுதிகவுக்கே பெரும் பலம் கிடைத்தது. அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது, முரசு சின்னம் நிரந்தரமானது. சட்டசபையிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஒரு எம்.எல்.ஏவுடன் இருந்து வந்த அந்தக் கட்சிக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். தமிழகத்தின் பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான திமுகவையே 3வது இடத்திற்குத் தள்ளி விட்டது தேமுதிக.

ஆனால் அதிமுகவுடனான கூட்டணி படு வேகத்தில் உடைந்து சிதறிப் போனது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவால் பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் சட்டசபையில் வைத்து தேமுதிகவை செமத்தியாக வாங்கி விட்டார் ஜெயலலிதா. கடுமையாக சாடிய அவர் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார். மேலும் சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்துப் போட்டியிடத் தயாரா என்றும் விஜயகாந்த்தை முகத்திற்கு முகம் நேரில் பார்த்து சவாலும் விட்டார்.

இந்தப் பரபரப்புப் பின்னணியில் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளது தேமுதிக. இருப்பினும் திடீரென திமுக நீட்டியுள்ள பாசக் கரமும், நேசக் குரலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வருங்காலத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. சங்கரன்கோவிலில் திமுக-தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

ஆனால் திமுகவும் சரி, தேமுதிகவும் சரி தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதனால் சங்கரன்கோவிலில் இரு கட்சிகளும் இணைந்து களம் காணும் வாய்ப்பு மங்கி விட்டது. இருப்பினும் விஜயகாந்த் மனதில் என்ன திட்டம் உள்ளது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் இன்று பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்டியிருந்தார் விஜயகாந்த். சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டங்கள் விஜயகாந்த் தலைமையில் இன்று முற்பகலில் தொடங்கின.

முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த விஜயகாந்த்து தடபுடலாக வரவேற்பளித்தனர் தேமுகவினர். வரும் வழியெங்கும் கட்சியின் கொடிகள் பறந்தன. வரவேற்பு பேனர்களும் கண்ணைப் பறித்தன.

முதலில் செயற்குழுவும், பின்னர் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்கள் கேமராக்கள், செல்போன்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் அது இல்லாமல் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக