புதன், பிப்ரவரி 29, 2012

பத்தாண்டுகளுக்கு பிறகு காப்பாற்றியவரை சந்தித்த குத்புதீன் !

குத்புதீன்மும்பை 2002 மார்ச் 1-ஆம் தேதி மதியம் சூரிய வெளிச்சத்தையும் இருட்டாக மாற்றிய புழுதி படலத்திற்கும், கொலைவெறி கூச்சல்களுக்கும் இடையே உலக சமூகத்தின் உள்ளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புகைப்படம் பிரபல ஃபோட்டோ க்ராஃபர் ஆர்கோ தத்தாவின் காமரா கண்களில் பதிவானது.

உயிர் பிச்சை கேட்கும் நிற்கதியான அந்த மனிதரின் கண்களில் தென்பட்ட பயம் ஒரு சமூகத்தின்  பரிதாப நிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
ஆர்கோ தத்தாவின் காமரா பதிவுச்செய்த குத்புதீன் அன்சாரி என்ற 28 வயதான இளைஞனின் புகைப்படம் 2002 குஜராத் இனப் படுகொலையின் கொடூரத்தை உலகிற்கு எடுத்தியம்பியது. ரத்தக்கறை படிந்த அழுக்கான சட்டையை அணிந்துகொண்டு, உயிர் பிச்சை கேட்டு கை கூப்பி, கண்ணீர் நிரம்பிய கண்களில் தென்பட்ட அதீத அச்சத்துடன் கூடிய  குத்புதீன் அன்சாரியின் புகைப்படம் ஆர்கோ தத்தாவுக்கு உலக ப்ரஸ் ஃபோட்டோ விருதை பெற்று தந்தது.
10 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக அன்சாரியை சந்தித்த பொழுது ஆர்கோவின் நினைவுகளுக்கு கண்ணீர் மற்றும் புன்சிரிப்பின் சுவை தெரிந்தது. முன்பு அன்ஸாரியை சந்தித்த அதே வராண்டாவில் நின்று கொண்டு நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் போது அன்சாரியை மீண்டும் சந்திக்க முடிந்ததில் ஆர்கோவின் வார்த்தைகளில் மகிழ்ச்சி இழையோடியது.
அன்று ராணுவத்தின் வேனில் புழுதிப் படலத்தின் ஊடே கடந்து செல்லும் வேளையில் ஆர்கோவும், அவரது நண்பர்களும் மின்னல் அடித்ததை போல அன்ஸாரியை கண்டார்கள். நிற்கதியாக உயிருக்காக போராடும் ஒரு கூட்டத்திற்கு உதவாமல் செல்லக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் வற்புறுத்தியதற்கு இணங்க அன்சாரிக்கு புதிய வாழ்க்கைக்கான வழி கிடைத்தது.
அந்த கொடூர நினைவுகளை அன்சாரி விவரிக்கிறார்:
“பற்றி எரிகின்ற தீ ஜூவாலைகளில் எல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வேளையில்தான் ராணுவ வீரர்களின்  வேன் அவ்வழியே வந்தது. வன்முறையாளர்களின் கும்பல் ஒன்று தீவைத்து கொளுத்திய கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு சிறிய குழுவினர் சிக்கிவிட்டனர். எதையும் கண்டுகொள்ளாமல் அப்பகுதியை கடந்து சென்ற வேன் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தது. மாடியில் சிக்கிய குழுவினரும் உயிர் தப்பினர்.
உயிருக்காக யாசிக்கும் கதியற்ற மனிதரின் புகைப்படம் உலக முழுவதும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. குஜராத் கூட்டுப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகமாக குத்புதீன் அன்சாரியின் புகைப்படத்தை ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், இவையெல்லாம் அன்சாரிக்கு தெரியாது. இந்த புகைப்படம் மூலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டதாக அன்சாரி கூறினார்.
தனது வேலையை இழந்து சொந்த ஊரையும், மாநிலத்தையும் விட்டு வெளியேறி தனது சகோதரிகளுடன் மகராஷ்ட்ராவில் குடியேறியதற்கு இந்த புகைப்படம்தான் காரணம் என்று அன்சாரி கூறுகிறார். ஊடகங்களின் வேட்டையாடல் காரணமாக அன்சாரிக்கு கிடைத்த சிறு வேலைகளையும் இழக்க வேண்டியது ஏற்பட்டது. அரசியல்வாதிகள் முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அன்சாரியின் புகைப்படத்தை பயன்படுத்தினர். ஆனால், ஒரு டீ ஷர்ட் விலை குறைவாக கிடைத்ததும், உம்மாவுக்கு ஹஜ்ஜிற்கான ஊசி போடுவது விரைவில் நடந்ததும், இந்த புகைப்படம் அளித்த நினைவுகளில் சிலதாகும்.
மன்னிப்பு கேட்க வார்த்தைகள் தெரியாமல் தவித்த ஆர்கோவிடம் அன்சாரி சுருக்கமாக கூறினார்: “எதுவும் யாருடைய குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய பணியை செய்தீர்கள். நான் எனது பணியை செய்தேன். இங்கு என்ன நடந்தது என்பதை எனது புகைப்படம் உலகிற்கு படம் பிடித்து காட்டியது. மீதமுள்ளவை எல்லாம் எனது விதியாகும்.”
பத்து வருடங்கள் அன்சாரியிடம் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தின. எட்டு வயது மகனும், நான்கு வயது மகளும் அச்சம்பவத்திற்கு பிறகு பிறந்தவர்கள். மூத்த மகளுக்கு 14 வயதாகிறது. அன்றாட வாழ்க்கையை கழிக்க ஒரு சிறிய தையல் கடை உள்ளது.
“என்னை நீங்கள் என்றைக்கும் ஒரு நல்ல நண்பனாகவே காணவேண்டும்” என்று ஆர்கோ அன்சாரியிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று அன்சாரியின் முகத்தில் காணப்படும் புன்சிரிப்பு ஒருபோதும் நஷ்டமாக கூடாது என்று நாமும் பிரார்த்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக