சென்னை: கூட்டணிக்காக எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று அதிமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வழக்கம் போல உச்சஸ்தாணியில் கோபாவேசமாக பேசினார். நரம்பு புடைக்க அவர் பேசிய பேச்சின்போது அதிமுகவையும், திமுகவையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்தார்.
அவர் பேசுகையில்,
எல்லா இடைத் தேர்தலையும் தே.மு.தி.க. சந்தித்து வருகிறது. ஆனால் 5 ஆண்டுகளாக இடைத் தேர்தலையே சந்திக்காதவர்கள்தான் நம்மைப் பார்த்து திராணி இருக்கிறதா என்று கேட்கின்றனர்.
தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைப்பதற்காக அ.தி.மு.க.வின் மூன்று முக்கிய நிர்வாகிகள், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய முழு விவரத்தையும் பதிவு செய்து உள்ளோம். தேவைப்படும்போது அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
தே.மு.தி.க. போன்று எதையும் தைரியமாகச் சந்திக்கக்கூடிய கட்சி தமிழகத்தில் இல்லை.
முன்பு நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலின் போதெல்லாம் தி.மு.க. இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சவாலாகப் பேசி வந்தவர் மு.க.அழகிரி. இப்போது வாக்கு வித்தியாசத்தைப் பற்றிப் பேசாமல் வெற்றி பெறுவோம் என்று மட்டும் கூறுகிறார்.
தே.மு.தி.க.வுக்காக எங்களின் பல்வேறு சொத்துகளை இழந்துதான் போராடி வருகிறோம். அது எங்களுக்குப் பெரிது இல்லை. எத்தனை இழந்தாலும் வெற்றியை நோக்கி போராடுவோம்.
ராமுவசந்தன் மகன் திருமணத்துக்காக மார்ச் 11-ம் தேதி மதுரைக்கு வருகிறோம். அன்று முதல் நானும் விஜயகாந்தும் பிரசாரம் செய்ய உள்ளோம். அனைத்து மாவட்டத் தே.மு.தி.க.வினரும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது 10 வாக்குகள் சேகரித்தாலே போதும். நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் பேசியதாக பேச்சைக் கேட்டவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக