நெல்லை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நெல்லையில் மின்வெட்டு நேரம் அமலில் இருந்த நேரம் பார்த்து தனது வேட்புமனுவை திமுக வேட்பாளர் தாக்கல் செய்தது அனைவரையும் கவர்ந்தது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை திமுக வேட்பாளர் தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்காக மதுரையிலிருந்து நெல்லை வந்து சேர்ந்தார் அழகிரி. அவருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் திமுகவினர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
அதன் பின்னர் திமுகவினர் புடை சூழ அழகிரி நெல்லை வந்தார். அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமாருடன் திமுகவினர் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் 'நல்ல நேரம்' என்பதால் அந்த நேரத்தில் ஜவஹர் சூரியக்குமார் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.திமுகவினர் மத்தியில் 'நல்ல நேரம்' என்று கூறப்பட்டது எப்படி என்றால் அது மின்தடை நேரமாகும். அதாவது நெல்லையில், வேட்பு மனு தாக்கல் நடைபெறும் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மின்வெட்டு நேரமாகும். இந்த நேரத்தில்தான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர். இதைத்தான் திமுகவினர் நல்ல நேரம் என்று கூறினர்.
மின்வெட்டு கொடுமையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இந்த நூதன உத்தியைக் கையாண்டனர் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜிடம் தனது வேட்பு மனுவை அளித்தார் ஜவஹர்.
நாளை திமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அழகிரியும் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் திமுகவினரின் தீவிரப் பிரசாரம் தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக