கெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.
முனூஃபியாவில் பிரச்சாரம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அப்துல் முனீமின் காரை தடுத்து நிறுத்திய மூன்று நபர்களை கொண்ட முகமூடி கும்பல் அவரது தலையில் பல தடவை தாக்கியுள்ளனர். பின்னர் காரில் ஏறி தப்பிவிட்டனர் என்று பிரச்சார குழுவில் இடம்பெற்றுள்ள அஹ்மத் உஸாமா கூறுகிறார்.
எகிப்தில் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் மீதமிருக்கவே வெற்றி பெறுவார் என கருதப்படும் அப்துல் முனீமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான அப்துல் முனீமிற்கு 60 வயது ஆகிறது. அதிபர் தேர்தல் குறித்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தீர்மானத்தை மீறியதை தொடர்ந்து முனீமை அவ்வியக்கம் நீக்கியது. பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் ஷேக் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி அப்துல் முனீமிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அப்துல் முனீம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்து குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக