திங்கள், பிப்ரவரி 27, 2012

ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சிக்கும் ஈரான்: ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள் !

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்ததால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால்,
அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்:
தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட நேரிடும் என, ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அது நிகழ்ந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.
படைக் குவிப்பில் அமெரிக்கா:
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டை மிரட்டும் வகையில், அப்பகுதியில் அமெரிக்கா, தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.
போர்க் கப்பல்கள் தயார்:
அதன்படி, பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சிறப்புப் பயிற்சிகள்:
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு, இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில், ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால், அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
உளவு நிறுவனங்களின்தகவல்கள்:
இதற்கிடையில், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, இரு முறை ஆய்வுகள் நடத்திய பின், வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.அவற்றின்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
அதேநேரம், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில், அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால், யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு, அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து, ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன.
ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை என்ன சொல்கிறது?
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும், கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ., குற்றம்சாட்டியுள்ளது. அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த இரு ஆய்வுகள் குறித்து, ஐ.ஏ.இ.ஏ., வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்:
*அணுசக்தி திட்டங்களின் ராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.
*போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
*அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில், 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.
*கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும், இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.
*1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக