புதன், பிப்ரவரி 22, 2012

சசிகலாவை தன் வீட்டுக்கு சாப்பிட அழைத்த வழக்கறிஞர் ஆச்சார்யா !

ஹோட்ட லில் சாப்பிட்டால் 'சிக்’ ஆகிவிடுவோம்’ என்று விதவிதமான காரணங்களைச் சொல்லி வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள். ஹோட்டல் சாப்பாடுதான் பிரச்னை என்றால், திருமதி சசிகலா என் வீட்டில் வந்து சாப்பிடட்டும்!'14   ஆண்டுகளாக நகராமல், ஒரே இடத்தில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்துக்குக் கொண்டு வந்ததில், 74 வயதான அரசுத்தரப்பு வக்கீல் ஆச்சார்யாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஜெயலலிதா வழக்கில் இருந்து தன்னை விலகச்செய்வதற்கு ஏகப்பட்ட பிரஷர் என்று வெளிப்படையாகவே கொந்தளித்து இருந்தார். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் அவரைச் சந்தித்தோம்.
 ''பி.ஜே.பி-யில் இருந்து உங்களுக்கு பிரஷர் கொடுத்தவர்கள் யார் என்பதைச் சொல்ல முடியுமா?''
''நான் எப்போதும் மனதில் ஒன்றை
வைத்துக்கொண்டு, மற்றொன்றைப் பேசு பவன் இல்லை. இந்தவழக்கில், கடந்த ஜூலை மாதம் முதல் நெருக்கடி ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகத் தொடங்கியதில் இருந்தே, மறை முகமாகவும் நேரடியாகவும் எனக்கு நெருக்கடிகள் வந்தன. 'இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்’ என்று கர்நாடக அரசின் தரப்பில் இருந்தும், பி.ஜே.பி. மேலிடத் தலைவர்களிடம் இருந்தும் அழுத்தம் வந்தது. எடுத்த எடுப்பிலேயே, 'அது முடியாது’ என்று கோபமாகக்‌ கூறிவிட்டேன்.
என்னைச் சமாதானப்படுத்த அட்வகேட் ஜெனரல் பதவியை வழங்கினார்கள். பெரிய பதவியைக் கொடுத்தால், இந்த வழக்கைவிட்டு நான் விலகி விடுவேன் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். ஒரே சமயத்தில் இரண்டு பதவிகள் வகிப்பதும் தவறு கிடையாது. ஏனெனில், இது உயர் நீதிமன்றத் தின் ஸ்பெஷல் அசைன்மென்ட். என்னை அமர்த்தியவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். 2004-ம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு முறை அட்வகேட் ஜெனரலாக இருந்திருக்கிறேன். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆஜரான பிறகுதான், பல இடங்களில் இருந்தும் பிரஷர் வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொலிடிகல் பிரஷர் வரும். இந்த முறை, என் மீது சொத்துக்குவிப்பு புகார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என்று பல நெருக்கடிகள் வந்தன. அதனால்தான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுவும் நல்லதுதான். இனி, முழுமையாக இந்த வழக்குக்காக அதிக நேரத்தைச் செலவிட முடியும்.''
''கண்ணியமான நீதித்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு, அழுத்தம் போன்ற செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''நீதித்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு என்பது முற்றிலும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பெரிய பதவியில் இருந்தால், யாரை வேண்டுமானாலும் அதிகாரம் செய்யலாம் என்ற அவர்களின் மனப் போக்கு மிகவும் ஆபத்தானது. நீதித்துறையே ஒரு நாட்டின் கண்ணாடி. அதன் வழியாகத்தான் உலகம் அந்த நாட்டைப் பார்க்கும். எனவே, இந்தியா போன்ற ஜனநாயக நாடு செம்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட‌ வேண்டும் என்றால், நீதித்துறையில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. சட்டத்தின் பார்வையில் பிரதம மந்திரியும் சாதாரணப் பிரஜையும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் விருப்பம். எனது விருப்பமும் அதுவேதான்!'
''தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இருந்தோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவர்களிடம் இருந்தோ ஏதேனும் அழுத்தம் வந்ததா?''
''இல்லை. வரவில்லை!'' (புருவங்களை உயர்த்திச் சிரிக்கிறார்!)
''14 ஆண்டுகளாக நீதிமன்றப் படி ஏறாமல் இருந்த ஜெயலலிதாவை, பெங்களூருவுக்கு நேரில் வரவழைத்தீர்கள். அப்போது நீங்கள் இருவரும் ஏதாவது பேசிக்கொண்டீர்களா?''
''நான் ஏற்கெனவே சொன்னது போல் சட்டத் தின் முன் அனைவரும் சமம். அவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதால், கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியது அவரது கடமை. அதைத்தான் அவர் செய்தார். இதை மீடியாக்கள்தான் பெரிதாகப் பார்க்கின்றன. பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் ஆஜராகப் போனபோது என்னைப் பார்த்து லேசாக சிரித்தார். நானும் சிரித்தேன். அவ்வளவுதான். வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.'
''அட்வகேட் ஜெனரல் என்ற பெரிய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விடாப்பிடியாக அரசுத் தரப்பு வக்கீலாகத் தொடரும் அளவுக்கு, ஜெயலலிதா வழக்கில் என்ன உங்களுக்கு அவ்வளவு அக்கறை?''
''அட்வகேட் ஜெனரல் பதவி என்பது மிகவும் உன்னதமான பதவி. ஆனால், இன்று ஆளும் கட்சி தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே நியமித்துக் கொள்வதால், அதற்கும் அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. ஆனால், நான் வகிக்கும் அரசுத் தரப்பு வக்கீல் என்பது, சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நியமித்தது. 'ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நேர்மையாக நடக்க வேண்டும்’ என்பதே இதன் ஒரே நோக்கம். என்னைப் பொறுத்த வரை அரசு வழங்கிய பதவியைவிட, நீதிமன்றம் வழங்கிய அசைன்மென்ட்தான் பெரிது. எனக்குப் பணிக்கப்பட்ட பணியை நான் செய்வதை, தனிப்பட்ட அக்கறை என்று சொல்வீர்களா?!'
''இப்போது, 'தொடர்ந்து பெங்களூரு ஹோட்டலில் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உடம்பு கெட்டுப் போய்விடும். அதனால் வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று சசிகலா தரப்பில் கேட்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''ஒவ்வொரு முறையும் அவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அப்பீல் போகும் நேரத்தில் எல்லாம், 'வழக்கை இழுத்தடிக்கக் கூடாது. வழக்குக்கு ஒத்துழைக்க வேண்டும். கூடிய விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்’ என்றுதான் நீதிபதிகள் கண்டிக்கின்றனர். ஆனால், 'எங்களுக்கு சென்னையில் வேலை இருக்கிறது. டெல்லியில் வேலை இருக்கிறது. உடல்நிலை சரியில்லை. ஹோட்ட லில் சாப்பிட்டால் 'சிக்’ ஆகிவிடுவோம்’ என்று விதவிதமான காரணங்களைச் சொல்லி வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள். ஹோட்டல் சாப்பாடுதான் பிரச்னை என்றால், திருமதி சசிகலா என் வீட்டில் வந்து சாப்பிடட்டும்!'
''சாட்சியங்களின் விசாரணை முடிந்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த‌ வழக்கின் போக்கு இனி எப்படி இருக்கும்?''
''குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 313-ன் படி, குற்றம் சாட்டப்பட்ட‌ ஏ1 ஜெயலலிதாவிடம் விளக்கம் பெறப்பட்டு உள்ளது. இப்போது ஏ2 சசிகலா, அப்புறம் ஏ3, ஏ4 என்று நால்வரிடமும் விசாரணை முடிக்க வேண்டும். அதன் பின்னர் குறுக்கு விசா ரணை, பெறப்பட்ட வாக்குமூலங்களின் மீதான வாதம் என்று நிறைய வேலைகள் இருக்கின்றன. அதற்குள் தீர்ப்பைப்பற்றி நான் எப்படிக் கூற முடியும்?' - அழுத்தமாகப் புன்னகைக்கிறார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக