செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளை போகும் பணம்.. எத்தனை முறை சொன்னாலும் கண்டுகொள்ளாத வங்கிகள் !

 சென்னை: வங்கிகளில் கண்காணிப்புக் காமராக்களைப் பொருத்துங்கள், காவலர்களை நியமியுங்கள் என்று காவல்துறை எத்தனை முறை அறிவுறுத்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் வங்கி நிர்வாகங்கள் அசட்டையாக உள்ளன. இதனால் மக்களின் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள் சென்னையில் 2வது முறையாக வங்கி ஒன்றில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கி கடந்த 2 ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் 15 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பகல் 2 மணிக்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாப்பிட சென்றனர். வங்கி முதன்மை காசாளர் கோபாலகிருஷ்ணன் பாதுகாப்பு பெட்டக அறையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றுவிட்டார். வங்கி மேலாளர் சண்முகசுந்தரம் தனது அறையில் இருந்தார். மேலும் ஒரு பெண் உள்பட 10 வாடிக்கையாளர்களும் உள்ளே இருந்தனர்.

அப்போது 4 பேர் வங்கிக்குள் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் கட்டி மூடி இருந்தனர். அவர்களில் 2 பேர் மேலாளர் அறைக்கு சென்றனர். மேலாளர் சண்முகசுந்தரத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி சத்தம் போடக் கூடாது என்று அமர வைத்தனர்.

பின்னர் அவர்களில் 2 பேர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி அமர வைத்தனர். அவர்களிடம் இந்தி கலந்த தமிழில் பேசி மிரட்டியுள்ளனர்.

பின்னர் ரெஸ்ட் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஊழியர்களையும் துப்பாக்கியைக் காட்டி அமைதிப்படுத்தினர். அவர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அனைவரையும் ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். மேலாளரை மட்டும் தங்களுடன் வைத்துக்கொண்டு பணம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக சாவியைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அந்த சாவி முதன்மை காஷியரிடம்தான் உள்ளது, அவர் சாப்பிடப் போயிருக்கிறார் என்றார்.

மேலும் கேஷ் கவுண்டரின் சாவியும் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் மேலாளரை தாக்கியுள்ளனர். பின்னர் உதவி மேலாளரை அழைத்து அவரிடம் இருந்த சாவி மூலம் பணம் வைக்கப்பட்டிருந்த கேஷ் கவுண்டரை திறக்கச் செய்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 14 லட்சம் பணத்தை எடுத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் போட்டனர். பின்னர் சண்முகசுந்தரத்தையும் அறையில் போட்டுப் பூட்டி விட்டு கிளம்பி விட்டனர்.

வங்கியை விட்டு வெளியே வந்த அவர்கள் படு சாவகாசமாக ரோட்டைக் கடந்து அங்கு நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த ஆம்னி வேனில் ஏறிப் போயுள்ளனர்.

இரண்டரை மணியளவில் சாப்பிடுவதற்காகப் போயிருந்த துப்புறவுத் தொழிலாளர் சாந்தி வங்கிக்குத் திரும்பி வந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து அறைக்குள் பூட்டப்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்தார்.

இதையடுத்து வங்கி மேலாளர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

வழக்கம் போல இந்த வங்கிக் கொள்ளையிலும் இந்திக்காரர்களே ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே பெருங்குடியில் நடந்த கொள்ளைக்கும், இந்தக் கொள்ளைக்கும் இடையே நிறைய ஒற்றுமைளும் உள்ளன.

அதேபோல இந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா இல்லை, காவலாளி இல்லை. இதுகுறித்து போலீஸார் பலமுறை வங்கிகளுக்கு அறிவுறுத்தியும் கூட அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாததால், கொள்ளையடித்தவர்கள் யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மது அருந்துவதற்காக அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அவர் கொள்ளையர்களைப் பார்த்துள்ளார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், 
மதுபான பார் அருகே 4 பேர் முகத்தை மறைத்தபடி சென்றனர். அவர்களிடம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியில் பதில் அளித்தபடி மாருதி காரில் ஏறிச் சென்றனர். மது அருந்திவிட்டு திரும்பி வந்தபோது போலீசார் நின்றனர். அதன்பிறகு தான் வங்கியில் கொள்ளை நடந்து இருப்பது எனக்கு தெரிய வந்தது என்றார்.

தற்போது அவர் சொன்ன அடையாளங்களை வைத்தும், ஊழியர்கள் சொன்ன அடையாளங்களை வைத்தும் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வங்கியின் முதன்மை காஷியர் சாப்பிட வெளியே போயிருந்ததால் பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கும் நிலை ஏற்படவில்லை. இல்லாவிட்டால் பெருமளவில் கொள்ளை போயிருக்கும்.

இந்த இரு சம்பவங்களுக்குப் பின்னராவது, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத வங்கிகள் அதுகுறித்து தீவிர கவனம் செலுத்தினால் மக்களின் பணம் அநியாயமாக கொள்ளை போவதைத் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக