செவ்வாய், பிப்ரவரி 21, 2012

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை: கேரள அரசு கோரிக்கை நிராகரிப்பு !

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை:
கேரள அரசு கோரிக்கை நிராகரிப்புதேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணை கேரளாவில் இருந்தாலும் 999 ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகம் அணையின் பராமரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறது.தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான ராயல்டி தொகையும் தமிழக அரசு செலுத்தி வருகிறது.
 
முல்லைப் பெரியாறு அணையின் கீழே இடுக்கியில் பிரமாண்ட அணையை கேரளா கட்டி அதன் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. இதற்கு போதுமான நீர் ஆதாரம் கிடைக்காததால் எதிர்பார்த்தப்படி மின்சாரம் உற்பத்தி செய்ய முடிய வில்லை.
 
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் பெறுவதற்காக பல்வேறு குறுக்கு வழிகளை கேரளா கடைப்பிடிக்கிறது. முல்லைப்பெரியாறு அணை பலவீன மடைந்து விட்டது. உடையும் ஆபத்து இருப்பதாக புரளி கிளப்பி விட்டது.
 
நிபுணர் குழு பார் வையிட்டு அணை உறுதியாக இருப்பதாக கூறியும் அதை கேரளா ஏற்க மறுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் மறுத்து வருகிறது.
 
சமீபத்தில் இந்தப் பிரச்சினை மீண்டும் பூதாகரமாக வெடித்து இரு மாநி லங்களிலும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசு புதிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அவர்கள் அணையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணைகட்ட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் உயிரின பாதுகாப்பு நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
புதிய அணை கட்டினால் பெரியாறு புலிகள் சரணாயலத்துக்கும் அங்குள்ள வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் போதும் பெருமளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போதும் இங்குள்ள இயற்கை வளங்கள் அழியும். எனவே இந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
உயிரின பாதுகாப்பு நிபுணர்குழு தனது அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. உயிரின பாதுகாப்பு நிபுணர் குழு எதிர்ப்பு காரணமாக புதிய அணை கட்ட மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி கிடைக்காது. இதனால் புதிய அணை கட்டும் கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக