செவ்வாய், பிப்ரவரி 28, 2012

நாடு தழுவிய வேலைநிறுத்தம் துவங்கியது !

புதுடெல்லி:மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தொழிலாளர் யூனியன்கள் நடத்தும் 24 மணிநேர நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று துவங்கியது.
11 தேசிய அளவிலான தொழிலாளர் யூனியன்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன.சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிலாளர் யூனியன்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த
வேண்டும், வேலைக்கான பாதுகாப்பு, முறைசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு தேசிய நிதியம் ஏற்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, மாதம் ரூ.10 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியமாக அறிவிக்க வேண்டும், எல்லோருக்கும் ஓய்வூதியமும், சம ஊதியமும் கிடைக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பும், தொழிற்சங்கம் அமைக்க உரிமையும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் 14-வது அகில இந்திய பொது வேலைநிறுத்தம் இது என்பது குறிப்படத்தக்கது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், வங்கிப் பணிகள் பெருமளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்,பங்கேற்பதாக வங்கி ஊழியர்களும் அறிவித்துள்ளனர். 15 வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தால் அரசு பஸ்களின் சேவை பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 275 பணிமனைகளுக்கும் திங்கள்கிழமை இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக