வியாழன், பிப்ரவரி 23, 2012

இஸ்லாமிய நாடான தங்களை தற்காத்துக் கொள்ளவும், திரும்ப தாக்கவும் தெரியும் : ஈரான்

IAEA-Iran talks on nuclear weapons probe end in failure ஈரானில் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பாக பேச்சு நடத்தச் சென்ற சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), தனது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளது.  ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ அதிகாரிகள் இது தொடர்பாக ஈரானுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண தெஹ்ரான் சென்றனர். ஆனால் இரண்டு நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதையடுத்து ஐஏஇஏ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை இரவு வியன்னா திரும்பியவுடன், பேச்சு தோல்வி என்ற அறிக்கை வெளியானது.

 ஈரானின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அது எந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாது என்றே தோன்றுகிறது. அந்நாட்டுக்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேர்ந்து பொருளாதார தடைகள் விதித்த போதிலும் அதைக் கண்டு அது சிறிதும் அஞ்சவில்லை. மேலும் அதன் நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற போதிலும், மற்றொரு பக்கத்தில் தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஐஏஇஏ பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு ஈரானுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஐஏஇஏ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மன்பராஸ்ட் தெரிவித்தார். ஆனால் ஐஏஇஏ வெளியிட்ட அறிக்கையில் பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாததற்கு ஈரான் அரசே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஆக்கபூர்வமாக பேச்சு நடத்தியபோதிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

 ஐஏஇஏ அதிகாரிகள் குழு இரண்டு முறை தெஹ்ரான் சென்ற போதிலும், குழுவினர் எவரும் ராணுவ வெடிகுண்டு சோதனை பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. பார்சின் எனும் பகுதியில்தான் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஈரானின் இந்த செயல் மிகவும் ஏமாற்றமளிப்பதாக ஐஏஇஏ பிரதிநிதி அமானோ தெரிவித்துள்ளார்.

 பல தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவேயில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 ஐஏஇஏ குழுவினர் தெஹ்ரானிலிருந்த புறப்பட்டவுடனேயே ஜெனரல் முகமது ஹெஜ்ஸôய், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளை ஒருபோதும் விட்டு வைக்க மாட்டோம். அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நாட்டைக் காப்போம் என்று குறிப்பிட்டார்.

 ஈரானின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். இஸ்லாமிய நாடான தங்களை தற்காத்துக் கொள்ளவும், திரும்ப தாக்கவும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளது.

 இதனிடையே ஈரான் ராணுவத்தின் விமான ஒத்திகை 4 நாள்களுக்கு மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தித்தாள் "இர்னா' தெரிவித்துள்ளது.

 புஷார் துறைமுகம் அருகே 73 ஆயிரம் சதுர மைல் பரப்பில் விமான ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்தப் பகுதியில்தான் ஈரானின் ஒரே ஒரு அணு மின் நிலையம் உள்ளது. கடற்பகுதி, தரைப்பகுதி, வான்பகுதி மூன்றிலுமே ஈரான் தன்னை வலுப்படுத்தி வருவதால் இப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணு குண்டு தயாரிப்பில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றே ஈரான் அரசு கூறி வருகிறது.

 ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக