புதன், பிப்ரவரி 22, 2012

நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- இலங்கை மீனவர்கள் அட்டூழியம் !

நடுக்கடலில் சுற்றிவளைத்து தாக்குதல்: நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
 நாகை அருகே உள்ள கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்,   விசைப்படகு உரிமையாளர். இவருக்கு சொந்தமான படகில் கோவிந்தராஜ் (வயது 47), வடிவேலு (25), ராஜசேக ரன் (18), சக்திவேல் (35), குருநாதன் (25), வையாபுரி (34), கலைமணி (29) மற்றும் உரிமையாளர் ராஜாராம் ஆகிய 8 பேரும் கடந்த 18-ந்தேதி இரவு கோடியக் கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.வழக்கமாக அவர்கள் 4 முதல் 5 நாட்கள் வரை நடுக்கடலில்  தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு திரும்புவது வழக்கம். இதேபோல்  8 பேரும் நேற்று நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 பைபர் படகுகளில் இலங்கை மீனவர்கள் 15 பேர் வந்தனர்.

அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கள் படகுகளில் மறைந்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து நாகை மீனவர்களின்   படகுகளில் வீசினர். இதில் 4 படகுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை  சற்றும் எதிர் பாராத நாகை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட தயாரானார்கள்.    ஆனால் அவர்களை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள் நாகை மீனவர்களின் படகுகளில் தாவினர்.

பின்னர் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் வடிவேல், கோவிந்தன், வையாபுரி, சக்திவேல் ஆகிய 4 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற மீனவர்களும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த நாகை மீனவர்கள் 8 பேரும் காயங்களுடன் இன்றுகாலை கரை திரும்பினர். இதைப்பார்த்த நாகை மற்றும் கீச்சாங்குப்பம் மீன வர்கள் கடற்கரையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. பின்னர் இதுபற்றி விசைப்படகு உரிமையாளர் ராஜாராம் மற்றும் கீச்சாங் குப்பம் பஞ்சாயத்தார்கள் நாகை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயம் அடைந்த மீனவர்கள் அனை வரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்ததும் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழிலை செய்யலாம் என்று நினைத்தனர். ஆனால் சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. சிங்கள கடற்படைக்கு பயந்த  காலம் போய்  தற்போது சிங்கள் மீனவர்களுக்கு பயப்படும் சூழ்நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வலியுறுத்தி இந்தியா சார்பில் பலமுறை வலியுறுத்தியும், நேரில் சென்று விளக்கியும், கண்டித்தும் தாக்குதல் மட்டும் நிற்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காயம் அடைந்த மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக