திங்கள், பிப்ரவரி 20, 2012

தமிழக அரசு நிபுணர் குழு அறிக்கை திருப்தி: கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும்: நாராயணசாமி

தமிழக அரசு நிபுணர் குழு அறிக்கை திருப்தி: கூடங்குளம்  அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும்: மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டிகூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு நேற்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை பார்வையிட்டது. பின்னர் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள்.  அதன்பின்னர் நிபுணர் குழு கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறியுள்ளது. இது குறித்து மத்திய மந்திரி நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

கூடங்குளம் அணுமின் நிலையம் 4 கட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அங்கு சென்று பார்வையிட்டு விஞ்ஞானிகளிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். 

பிரதமர் மன்மோகன்சிங் 15 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தார். அந்த விஞ்ஞானிகள் குழுவினரும் அனுமின்நிலையத்தை பார்வையிட்டு மக்களிடம் பேசி மிகவும் பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்தனர். 

குறிப்பாக பூகம்பம், சுனாமி வந்தால்கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், ஸ்திரமான முறையில் கட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். இதேபோல் தமிழக அரசும் டாக்டர் சீனுவாசன் தலைமையிலான குழுவை அமைத்து அனுமின்நிலையத்தை ஆய்வு செய்தது. அந்த குழுவினரும் போராட்ட குழுவினரிடம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது என்பதை விளக்கி கூறியுள்ளனர். அந்த குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அணுமின்நிலையம் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பாதுகாப்பாக அமைந்துள்ளது என்று தொடர்ந்து மத்திய அரசு கூறி வந்ததை இப்போது தமிழக அரசின் குழுவும் உறுதி செய்துள்ளது. விரைவில் இந்த குழு தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும். 

ஒருமாத காலமாக அணு மின்நிலையம் மூடப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதால் ரூ.750 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு யார் பொறுப்பானவர்கள் என்று கண்டறிய வேண்டும். 

போராட்டக்குழுவினர் மிகவும் பாதுகாப்பானது என்று தெரிந்தும் மக்களை திசைதிருப்பி வருகிறார்கள். அதோடு மக்களை சந்தித்து குழுவினர் விளக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு மக்கள் கருத்தை போராட்டக் குழுவினர் பிரதிபலிப்பதால் மக்களிடம் விளக்கும் அவசியம் இல்லை என்று விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்திற்கு மின்பற்றாக்குறை நிலவும் நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறந்தால் 1000 மெகாவாட் மின்சாரம் உடனடியாக கிடைக்கும். எனவே தமிழக அரசுடன் மத்திய அரசு பேசி விரைவில் அணுமின்நிலையம் திறக்கப்படும். 

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக