சென்னை திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இருப்பினும் தனித்துப் போட்டியிடுமா அல்லது திமுகவின் ஆதரவை நாடுமா என்பது தெரியவில்லை.
சங்கரன்கோவிலில் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அதிமுக தனது வேட்பாளராக என்ஜீனியர் முத்துச்செல்வியை அறிவித்தது.
பின்னர் திமுக தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல மதிமுகவும் தனது வேட்பாளராக டாக்டர் சதன்திருமலைக்குமாரை அறிவித்தது.
இந்த நிலையில் தேமுதிகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. நாளை கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார் விஜயகாந்த்.
தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. அதேசமயம், பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மங்கியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் தேமுதிக, திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் இவர்களில் யாராவது ஒருவர் விலகிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் எப்படிப் பேசப் போகிறார், என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக