செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஈரான் விசயத்தில் இந்தியா எங்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது : அமெரிக்கா புலம்பல்

ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு, அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததற்குச் சமானம் என, அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில்
இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.அதேநேரம், சர்வதேச அளவில் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காக, ஈரானின் எண்ணெயை வாங்க வேண்டாம் என, அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் கூறி வருகிறது. இந்தியா அதைப் புறக்கணித்து விட்டு தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் சார்புச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வது என்ற இந்தியாவின் முடிவு, அந்நாட்டோடு நெருங்கிப் பழகி வரும் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தான். மேலும், கடைசியாக இருந்த மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்தியாவின் அடுத்தடுத்த அரசுகளுடன் மேற்கொண்ட அரசியல் ரீதியிலான உறவுகளுக்குப் பின்னடைவுதான்.

ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தினுடன் இணைந்து செல்லாமல் தனித்துச் செல்வதாக இந்தியா எடுத்த முடிவு, அதன் தலைமைத்துவம் பற்றிய சந்தேகங்களையும் எழுப்புகிறது.இவ்வாறு பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.சமீபத்தில், "தி பாஸ்டன் க்ளோப்' பத்திரிகையில், பர்ன்ஸ் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், இந்தியாவுடன் நீண்ட கால அடிப்படையிலான உறவுகளை அமெரிக்கா பேண வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக