ஏமனில், அதிபர் அலி அப்துல்லா சலேயின் 33 ஆண்டுக் கால ஆட்சி முடிந்ததன் அறிகுறியாக, அங்கு இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. துணை அதிபர் அப்துர் அபு மன்சூர் ஹாடி மட்டுமே வேட்பாளராக நிற்கும் இத்தேர்தலுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.ஏமனில் கடந்த 33 ஆண்டுக் காலமாக அலி அப்துல்லா சலே அதிபராக இருந்து வந்தார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி அரபு நாடுகளுக்கும் பரவியது. ஏமனில்
சலேயை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கினர்.
அதன் முடிவில், கடந்தாண்டு நவம்பரில், வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் முன்வைத்த ஒப்பந்தம் ஒன்றில், சலே கையெழுத்திட்டார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் யாவும் துணை அதிபர் ஹாடிக்கு வழங்கப்பட்டன.தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் சலே, தனது கட்சியின் தலைவர் என்ற நிலையில் தான் நாடு திரும்பப் போவதாக தெரிவித்தார்.இந்நிலையில், வளைகுடா நாடுகளின் ஒப்பந்தப்படி, இன்று அங்கு இடைக்கால அதிபர் தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில், வேட்பாளராக துணை அதிபர் ஹாடி மட்டுமே நிற்கிறார்.அதேநேரம், ஏமனின் தெற்குப் பகுதியை பிரிக்கக் கோரும் தென்பகுதி பிரிவினை இயக்கமும், வடபகுதியில் இயங்கி வரும் ஜைதி புரட்சியாளர்களும் இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
எனினும், இத்தேர்தலுக்குப் பின் ஏமனில் நிலையான அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து, ஹாடிக்கு கடிதம் எழுதியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஏமனின் உறுதியான நண்பனாக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக