புதுடெல்லி:இந்திய தலைநகரான டெல்லியில் நிகழ்ந்த இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமெரிக்க ரகசிய உளவு பிரிவு சேகரித்த தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பில் ஈரான் தொடர்பு குறித்து குற்றம் சாட்டும் தகவல்களையும் அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாம். இவ்விபரங்களை
இந்திய ரகசிய உளவு நிறுவனங்கள் உறுதிச் செய்துள்ளதாக இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட வட்டாரங்கள தெரிவிக்கின்றன.
ஆனால், ஈரானின் பங்கு சந்தேகத்திற்குரியதாக இருந்த பிறகும் இந்தியா மவுனம் சாதிப்பது ஆச்சரியமானது என்று பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் கூறுகின்றன. ஈரானுடன் தூதரக உறவில் எதிர்விளைவுகளை கருத்தில் கொண்டு இந்தியா மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்தியாவிடம் ஒப்படைத்த விபரங்கள் எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தது என்பது குறித்து இவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதனிடையே, குண்டுவெடிப்பு இந்தியா-ஈரான் உறவில் சிறிது விரிசலை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்காவில் கன்ஸர்வேடிவ் ஹெரிட்டேஜ் ஃபவுண்டேசன் ரிசர்ச் ஃபெல்லோவும், முன்னாள் சி.ஐ.ஏ பகுப்பாய்வாளருமான லிஸா கர்டிஸ் கூறுகிறார். ‘குண்டுவெடிப்பில் ஈரானின் தொடர்பை கண்டுபிடித்தால், கண்டிப்பதை தவிர வேறொன்றும் இந்தியாவில் செய்ய இயலாது’ என்று அவர் கூறினார்.
ஈரான் தூதரக பிரதிநிதிகளையும் வெளியேற்ற இந்தியா தயாராகாது என்று கர்டிஸ் பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நாட்டின் விருப்பங்களை முன்னிறுத்தி ஈரானுடன் நல்லுறவை பேணுவதும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல் உறவை பரிபாலிப்பதற்கும் இந்தியா முயற்சிக்கிறது என்று கர்டிஸ் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக