மாலத்தீவின் புதிய அதிபர் முகமது வாஹீத் தனது தலைமையிலான அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) விரிவாக்கம் செய்தார். முன்னாள் அதிபரான மெüமூன் கயூமின் மகள் துன்யா மெüமூனுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய இலாகாவான வெளியுறவுத் துறைக்கு இன்னும் கேபினட் அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சராக ஷேக் முகமது ஷாகீம் அலி சயீத்தும், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக முகமது மியூசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தேர்தல் வேண்டும்: பதவி விலகிய முன்னாள் அதிபர் முகமது நஷீத், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். இதுபோன்ற நிலையில் புதிய அதிபர் தனது தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவில் புதிய அரசுக்கு எதிராக முகமது நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சி: இதனிடையே, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாலேவில் புதிய அதிபரை சனிக்கிழமை சந்தித்த அக்குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது, மாலத்தீவில் அரசியல் குழப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், தற்போதைய சூழலுக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிபர் உறுதி: மேலும், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம் குறித்து காமன்வெல்த் நாடுகள் அமைச்சர்கள் குழு நடத்தும் விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு தருவதாக புதிய அதிபர் முகமது வாஹீத் உறுதி அளித்துள்ளதாகவும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக