புதுச்சேரி: பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் புதுச்சேரியில் கொந்தளிப்பான நிலைமை நீடித்து வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் இன்று 10 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது புதுவையில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களை வீதியில் இறக்கிவிட்டிருக்கிறது. இச்சம்பவத்தால் மாநிலமே கொந்தளித்துக் கிடக்கிற போதும் மாநில முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த ஒரு அனுதாபத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்த அனைத்து கல்லூரி மாணவர்களும் மாணவி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பாக ஒன்று திரண்டு பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது சுமார் 10 மாணவிகள் மயக்கமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்தும் அவர்களது முற்றுகைப் போராட்டம் நீடித்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் பிரதிநிதிகளும் திரண்டுள்ளனர். புதுவையில் இன்று 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாணவியின் சொந்த ஊரான திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபோல பா.ம.க. சார்பில் ஐ.ஜி. அலுவலகம் முன்பும், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுப்பையா சிலை முன்பும், மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் அண்ணாசாலையில் பிலால் ஓட்டல் அருகிலேயும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுபோல் புதுவையில் பல்வேறு பகுதிகளிலும் மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக