புதன், ஏப்ரல் 11, 2012

உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிட இஃவானுல் முஸ்லிமீன் எதிர்ப்பு !

Omar Suleiman criticises Muslim Brotherhoodகெய்ரோ:பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் உளவுத்துறை தலைவரும், முன்னாள் துணை அதிபருமான உமர் சுலைமான எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இஃவானுல் முஸ்லிமீன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது எகிப்திய மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று இஃவான்களின் தலைவர்களில் ஒருவரும், அதிபர் பதவி வேட்பாளருமான
ஹைராத் அல் ஷாத்திர் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மனு தாக்கல் முடிவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பாக உமர் சுலைமான மனுதாக்கலை செய்தார். எகிப்து அதிபர் தேர்தலில் 23 பேர் போட்டியிடுவதாக இறுதியாக கிடைத்த தகவல் கூறுகிறது.
முபாரக்கின் ஆட்சி காலத்தில் சித்திரவதைகளுக்கும், கொலைகளுக்கும் தலைமை தாங்கியவர் தாம் உமர் சுலைமான். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனில் பழையை மோசடிகளை கையாள வேண்டும். அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால், மீண்டும் புரட்சி நடக்கும் என்று ஷாத்திர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளையில் ராணுவத்திற்கும், இஸ்லாமிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நிலவுவதாக வெளியான செய்தியை ஷாத்திர் மறுத்தார். கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று ஷாத்திர் தெரிவித்தார்.
தேர்தல் இறுதிக் கட்டத்தை அடையும் வேளையில் இஸ்லாமியவாதிகளும், முபாரக் அரசில் இடம் பெற்றிருந்தோரும் களத்தில் இருப்பர். இதனிடையே எகிப்திற்கான 320 கோடி டாலர் ஐ.எம்.எஃப் கடனுக்கு நிபந்தனைகளை மாற்றாமல் அங்கீகரிக்க இயலாது என்று இஃவானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக