புதன், ஏப்ரல் 11, 2012

குல்பர்க் சொஸைட்டி:இரத்தக்கறை புரண்ட மோடிக்கு எஸ்.ஐ.டி நற்சான்றிதழ்!


அஹ்மதாபாத்:குஜராத் குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் முதல்வர் மோடிக்கு எதிர்பார்த்தது போலவே ஆர்.ராகவன் தலைமையிலான எஸ்.ஐ.டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மோடிக்கு எதிராக ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இந்திய வரலாறு காணாத அளவுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதம் மோடியின் தலைமையில் கோரத்தாண்டவம் ஆடியது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
அவ்வேளையில் நிகழ்ந்த மிகக்கொடூரமான கூட்டுப் படுகொலைதான் குல்பர்க் ஹவுஸிங் சொஸைட்டி படுகொலைகள். அங்கு 69 பேர் தீவைத்துக் கொளுத்தப்பட்டு கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரி வெட்டப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டு கோரமாக படுகொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஸாப்ரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியையும் மேலும் 57 பேரையும் குற்றவாளியாக சேர்த்திருந்தார். இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஆர்.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தது.
ஆர்.ராகவன் தலைமையிலான எஸ்.ஐ.டி மோடிக்கு சாதகமாக நடந்துகொள்வதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர். ஏற்கனவே அவரது அறிக்கையில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி கசிந்தது.
இந்நிலையில் இத்தகவலை அஹ்மதாபாத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. ஸாகியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய ஆ.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, இதில் மோடிக்கும் 57 பேருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பட் இன்று அறிவித்தார்.
மேலும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் ஸாகியா ஸாப்ரியிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மே 10-ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக