சனி, ஏப்ரல் 14, 2012

‘டீஸ்டாவுக்கு எதிரான வழக்கில் மனித உரிமை மீறல்’- விசாரணையை நிறுத்த மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!


புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் இறந்த உடல்களை தோண்டி எடுத்தது தொடர்பான வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் மீதான வழக்கு விசாரணையை நிறுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் குஜராத் மோடி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில், பஞ்சமஹல் மாவட்டம் பந்தர்வாடா எனுமிடத்தில் அடையாளம் தெரியாத 28 சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த சடலங்களை சட்டத்துக்குப் புறம்பாகத் தோண்டி எடுத்ததாக ஐந்து பேர் மேல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களை விசாரித்தபோது சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் கூறியதன் பேரில் அவர்கள் சடலங்களைத் தோண்டி எடுத்ததாக வாக்குமூலம் தந்தனர்.
இதைத் தொடர்ந்து, டீஸ்டாவை விசாரிக்க சம்மன்ஸ் அனுப்பப்பட்டது. தன் மீதான விசாரணையை எதிர்த்து டீஸ்டா குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு அவர் கோரியிருந்தார். அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்ஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்து வழக்கை கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி டீஸ்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரவிசங்கர் பிரசாத் ஆஜரானார். டீஸ்டாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்று நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையானது மனித உரிமை மீறல் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட புகார்கள் விசாரணையின்போது உறுதியாகி உள்ளன என்றும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் சடலங்களைத் தோண்டி எடுத்த வழக்கில் டீஸ்டா பெயர் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடைபெற்றபோது தனிப்பட்ட சாட்சியங்களின் கூற்றின்படி அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சடலங்களைத் தோண்டி எடுத்தவர்கள், டீஸ்டா கூறியதால்தான் தாங்கள் அவ்வாறு செய்ததாகத் தங்களுடைய வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
டீஸ்டாவின் பெயர் வழக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்புள்ள நிலையின்படியே விசாரணை நடைபெற்றது என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 18-க்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக