சனி, ஏப்ரல் 07, 2012

நீதிபதி நானாவதிக்கு மோடியின் கைம்மாறு!


புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறிய குஜராத் இனப்படுகொலை விசாரணை கமிஷன் தலைவரான நீதிபதி நானாவதிக்கு அவரது மகன்கள் இருவருக்கும் அரசு வழக்குரைஞர் பதவியை வழங்கி கைம்மாறு செய்துள்ளார் மோடி.

நீதிபதி நானாவதியின் மகன்களான மவ்லிக் நானாவதி மற்றும் தவால் நானாவதி ஆகியோருக்கு மோடியின் அரசு வழக்குரைஞர் பதவியை வழங்கியுள்ளது.
அதேவேளையில் நானாவதி-மேத்தா கமிஷனின் காலாவதியை குஜராத் அரசு 18-வது தடவையாக நீட்டித்துள்ளதை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக இவ்வறிக்கை வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
நீதிபதி நானாவதி விசாரணை கமிஷன் தலைவராக பொறுப்பேற்ற 3-வது ஆண்டில் அவரது மகன் மவ்லிக்கை மோடி குஜராத் கூடுதல் அரசு வழக்குரைஞராக நியமித்தார். மூன்று வருடங்கள் கழிந்தபிறகு இரண்டாவது மகன் தவாலையும் குஜராத் அரசு வழக்குரைஞராக நியமித்தது.
தற்பொழுது குஜராத் உயர்நீதிமன்றத்தில் அரசின் பல வழக்குகளிலும் தவால் வாதாட ஆஜராகி வருகிறார்.
முஸ்லிம் இனப் படுகொலைக்கு தலைமை தாங்கிய மோடிக்கு எதிராக விசாரணை நடத்தும் கமிஷனின் பிள்ளைகள் குஜராத் அரசுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஆஜராவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிபுரிந்த பா.ஜ.க அரசு, 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான இனப் படுகொலையை குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதியை நியமித்தது. அப்பொழுது நானாவதியின் மகன் தவாலுக்கு மத்திய அரசு வழக்குரைஞராக எம் பானல் அளித்திருந்தது.
நீதிபதி நானாவதியின் மகன்களுக்கு குஜராத் அரசு வழக்குரைஞராக நியமித்ததற்கு மூத்த வழக்கறிஞர் கிரீஷ் பட்டேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஜராத் இனப் படுகொலையில் முதல்வர் மோடியின் பங்கினைக் குறித்து நீதிபதியான தந்தை விசாரணை நடத்திவரும் வேளையில் அவரது மகன்களுக்கு மோடி தலைமை வகிக்கும் குஜராத் அரசு வழக்குகளில் வாதாட பணம் கொடுக்கிறது.
அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான தார்மீகத்திற்கும், சட்டம் மற்றும் நீதித்துறையில் பேணவேண்டிய நேர்மைக்கும் எதிரான செயல் இது. அப்பட்டமான தனிப்பட்ட விருப்பமே இதன் பின்னணியில் உள்ளது என்று கிரீஷ் பட்டேல் குற்றம் சாட்டுகிறார்.
இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் ஆதாரங்களுடன் புகார் அளித்த பிறகும் மோடியை விசாரணை நடத்த நானாவதி கமிஷன் தயாராகவில்லை. ஆனால், மோடியை விசாரிக்க போதுமான ஆதாரமில்லை என்று கூறி நானாவதி கமிஷன் இக்கோரிக்கைகளை நிராகரித்து வருகிறது.
முஸ்லிம் இனப் படுகொலைகளுக்கு தலைமை வகித்த மோடியை பாதுகாக்கும் நிலைப்பாடுதான் நானாவதி கமிஷனுடையது என்று உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம் சாட்டுகிறார்.
குஜராத் இனப் படுகொலையில் மோடியின் பங்கு வெளிவராமலிருக்கவே குஜராத் அரசு விசாரணை கமிஷனை நியமித்தது.
2002 மார்ச் 6-ஆம் தேதி பா.ஜ.க ஆதரவாளரான ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஜி ஷா கமிஷனாக நியமிக்கப்பட்டார். ஷாவின் பா.ஜ.க தொடர்பு குறித்து குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நானாவதி கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக