பாகிஸ்தானில் இந்திய மரணதண்டனை கைதி சரப்ஜித் சிங், சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தத நிலையில், ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆயுள் கைதியான ஷனுல்லாவை சக ஆயுள் கைதியான வினோத் குமார் என்பவர் 2 தினங்களுக்கு முன் செங்கல்லால் தலையில் பலமாக தாக்கியதில், சனுல்லாவின் மண்டை ஓடு உடைந்தது. இதனால் அவர் சுய நினைவிழந்து கோமாநிலைக்கு சென்றார். இதைதொடர்ந்து சண்டிகர் மருத்துவமனையில் அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
‘ஷனுல்லாவின் மண்டை ஓட்டில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. தலையில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. இந்த தாக்குதலால் அவருடைய மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மயக்க நிலையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சிகிச்சையை அவருடைய உடல்நிலை ஏற்றால், தலையில் அறுவை சிகிச்சை செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் உள்ள ஷனுல்லாவை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் பார்த்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்த அவர்கள், நேற்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
இந்நிலையில் ஷனுல்லாவை தாக்கிய வினோத் குமார் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரரை கொலை செய்த வழக்கில் வினோத் குமார் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஷனுல்லா தாக்கப்பட்ட அன்று, இருவரும் சிறை தோட்டத்தில் வேலை செய்துள்ளனர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வினோத் குமார், அங்கிருந்த செங்கலை எடுத்து சனுல்லாவின் தலையில் தாக்கியுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இப்பிரச்சனையை தொடர்ந்து இரு நாடுகளும் தற்போது வெளிநாட்டு கைதிகளுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக