சென்னை:முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் துப்பாக்கி திரைப்படம்நேற்று( வியாழக்கிழமை) திரையிடப்பட்டது. நடிகர் விஜய் நடித்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக
சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே படம் வெளியானவுடன் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் வாக்களித்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் ஜே.அப்துல் ரஹீம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம்களை இழிவுப் படுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வழங்கிய யு சான்றிதழை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக துப்பாக்கி படத்தை நீதிமன்றத்தில் திரையிட ஏற்பாடு செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை பிற்பகல் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன், மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு,ஏ. ரமேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் மகேஸ்வரி, அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் திரைப்படத்தைப் பார்த்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து வழக்குரைஞர் சங்கரசுப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் மகேஸ்வரி நீதிபதிகளிடம் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக