புதுடெல்லி:பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்வதற்காக எல்லையை கடந்து ஒரு மூதாட்டி சென்றதை தொடர்ந்து இந்திய ராணுவம் கிடங்குகளை நிர்மாணிக்கும் பணியை துவங்கியதே மோதலுக்கு காரணம் என்று ஹிந்து பத்திரிகை கூறுகிறது. எல்லையில் உருவாகியிருக்கும் மோதல் 2003-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்குமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு
இந்திய ராணுவ வீரர்கள் தலை அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.
ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரியில் சரோண்டா கிராமத்தைச் சார்ந்த ரேஷ்மா கடந்த செப்டம்பர் மாதம் எல்லையை கடந்து சென்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீருக்கு இவருடைய பிள்ளைகள் சென்றுவிட்டனர். ரேஷ்மாவும், அவரது கணவர் இப்ராஹீம் லோஹரும் சரோணா கிராமத்தில்தான் வசித்து வந்தனர். தனது இறுதிக் காலத்தை பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் கழிக்க ரேஷ்மா எல்லையைக் கடந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உரியை மையமாக கொண்ட 19 இன்ஃபாண்டரி பிரிகேட்ஸ் படையினர் கிராமவாசிகளை கண்காணிக்க சரோணாவை சுற்றிலும் கண்காணிப்பு மையங்களை நிர்மாணிக்க துவங்கினர். இது 2003-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கூடாது. கண்காணிப்பு மையங்களை அமைக்க பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
கிடங்குகளை நிர்மாணிப்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், நிர்மாணத்தை நிறுத்தவில்லை. அது கிராமவாசிகளை கண்காணிப்பதற்காகத்தான் என்பதால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார். அக்டோபர் மாதம் நிர்மாணப் பணிகளை நிறுத்த பாகிஸ்தான் ராணுவம் கோரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 3 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலைமை சிக்கலானது. பாகிஸ்தானின் மையங்கள் மீது தாக்குதல் நடத்த 19 இன்ஃபாண்டரி டிவிசன் கமாண்டர் குலாப் சிங் ராவத் அனுமதி பெற்றார். தங்களின் ஸவன்பத்ரா செக்போஸ்டில் இந்திய ராணுவம் ரெய்டு நடத்தியது என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இந்தியா இதனை மறுத்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடக்கும்பொழுது ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எல்லையை கடந்து சென்று ரெய்ட் நடத்த ராணுவத்தினருக்கு அனுமதி அளிக்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் டெல்லியில் தெரிவித்துள்ளன. ஆனால், துப்பாக்கிச்சூடு நடக்கும்பொழுது இரு நாட்டு ராணுவத்தினரும் இதற்கு முன்பும் இத்தகைய அத்துமீறல்களை நடத்தியுள்ளனர் என்று உயர் அதிகாரியொருவர் கூறியதாக ஹிந்து பத்திரிகை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக