வியாழன், ஜனவரி 10, 2013

பதியுஸ்ஸமான் நூர்ஸியின் அடக்கஸ்தலம் எங்கே?

அங்காரா:1960-ஆம் ஆண்டு மரணமடைந்த சூஃபி அறிஞரும், இஸ்லாமிய சிந்தனையாளருமான பதியுஸ்ஸமான் ஸய்யித் நூர்ஸியின் அடக்கஸ்தலம் குறித்த விசாரணை துருக்கியில் தீவிரமடைந்துள்ளது. 1960-ஆம் ஆண்டு ஜூலை12-ஆம் தேதி ராணுவ புரட்சி நடந்த ஆறு வாரத்திற்குள் தென்கிழக்கு துருக்கியில் உல்ஃபா நகரத்தில் இப்ராஹீம் நபி அவர்களை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படும் மண்ணறை மைதானத்தில் இருந்து நூர்ஸியின் உடல் பாகங்களை பலவந்தமாக ராணுவத்தினர் கடத்திச் சென்று ரகசியமாக அடக்கம் செய்தனர். நூர்ஸியின்
அடக்கஸ்தலத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் உல்ஃபாவிற்கு வருகை தந்தது மதத்தை வெறுக்கும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பதியுஸ்ஸமான் ஸய்யித் நூர்ஸி, துருக்கி குடியரசை ஸ்தாபித்தவர் ஆவார். மேலும் தீவிர மதசார்பற்றவாதியும், ஏகாதிபத்தியவாதியுமான கமால் பாஷா அத்தா துர்கின் பரம எதிரியாகவும் திகழ்ந்தார். ஏ.கே.பார்டி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து மாற்றத்தின் அடையாளங்கள் தென்படத் துவங்கின. இந்நிலையில் ராணுவம் ரகசியமாக அடக்கம் செய்த நூர்ஸியின் மண்ணறையை தெரிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நூர்ஸியிடம் தேசம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஏ.கே கட்சியின் முக்கிய பிரமுகரும், எம்.பியுமான ஸெல்ஜுக் உஸ்பாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கப்றுஸ்தானை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட கமிஷன், 1960-ஆம் ஆண்டு ராணுவ புரட்சியில் பங்கேற்ற ராணுவத்தின் உறுப்பினர்களிடம் தகவல்களை சேகரித்து வருகிறது. ஆனால், இந்த உறுப்பினர்களில் பலருக்கும் வயது என்பதை தொட்டுள்ளது. கமிஷனுக்கு இதுவரை சரியான தகவல்கள் கிடைக்காததால் ஒரு பாராளுமன்ற கமிட்டி இதற்காக நியமிக்கப்படும் என கருதப்படுகிறது.
இதனிடையே நூர்ஸியின் ரிஸாலே நூர் என்ற உபதேச புத்தகத்தின் விற்பனை லட்சங்களை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியிலும், வெளிநாடுகளிலும் நூர்ஸிக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் இருப்பதாக பிரபல வரலாற்று ஆசிரியர் முஸ்தஃபா அக்கியோல் கூறுகிறார்.
ஃபத்ஹுல்லாஹ் குலான் தலைமையிலான உலக முழுவதும் கிளைகளை கொண்ட அமைப்பும் நூர்ஸிக்கு ஆதரவானதாகும். குர்துக்கள் இடையேயும் நூர்ஸியின் சிந்தனைகளுக்கு ஆதரவு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக