வியாழன், ஜனவரி 10, 2013

மலேகான்:இரண்டு முஸ்லிம்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்தினர்!- என்.ஐ.ஏ !

புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு 2 முஸ்லிம் இளைஞர்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று என்.ஐ.ஏ கூறுகிறது. ஆனால், அவர்கள் மீது தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் கைது செய்யவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் வெளியிடங்களைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தனியாக குண்டு வைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்வதும், குண்டுவைப்பதும் சாத்தியமல்ல என்று என்.ஐ.ஏ கருதுகிறது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைதான ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தா, 2007-ஆம் ஆண்டு அஜ்மீரில் நிகழ்ந்த
குண்டுவெடிப்பிற்கு 2 முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் 2 முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்தினார் என்பதை கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கூறியதாக அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த இளைஞர்களுக்கு மலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பிருக்கலாம் என்று என்.ஐ.ஏ கருதுகிறது.
குண்டுவெடிப்பை முஸ்லிம்களின் தலையில் கட்டிவைக்கவும், தங்கள் மீது ஒரு போதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் முஸ்லிம்களை பங்காளிகளாக்கினார் என கருதப்படுகிறது.
ஆனால், பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இதுக்குறித்து எதுவும் கூறவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன் தினம் கஸ்டடியில் விசாரிக்க எடுத்துள்ள லோகேஷ் சர்மாவிடம் இருந்து கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என என்.ஐ.ஏ நம்பிக்கை தெரிவிக்கிறது. லோகேஷ் சர்மா, ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, சுனில் ஜோஷி ஆகியோர் தாம் ஹிந்துத்துவா பிரிகேட்ஸ் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக