புதுடெல்லி:மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்னர் அங்கு விரிவான சர்வேயை நடத்தினோம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான ஹிந்துத்துவா தீவிரவாதி டான்சிங் என்.ஐ.ஏவிடம்(தேசிய புலனாய்வு ஏஜன்சி) வாக்குமூலம் அளித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மலேகானில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இந்த சர்வேயை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளிகளான ராஜேந்தர் சவுத்ரி, அமித் என்ற அஸ்வினி சவுகான், ராம்ஜி கல்சங்கரா ஆகியோருடன் டான்சிங் இந்த சர்வேயை நடத்தியுள்ளான். ராஜேந்தர் சவுத்ரி கைதான பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளைக்
குறித்த கூடுதல் தகவல்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது. இவன் அளித்த தகவலின் அடிப்படையிலேயே டான்சிங் கைதானான்.
இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாக இருந்த டான்சிங் மற்றும் இருவருக்கும் 2006-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மத்தியபிரதேச மாநிலம் பாக்லி கிராமத்தில் வைத்து கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷி தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளான். இந்த முகாமில்தான் மலேகான் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்பட்டது.
சுனில் ஜோஷியும், மராட்டி மொழி பேசும் இதர சில நபர்களும் இணைந்து வெடிக்குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை முகாமிற்கு கொண்டுவந்துள்ளனர். லோகேஷ் சர்மாவின் தலைமையில் எலக்ட்ரிகல் துறையில் அனுபவம் கொண்ட ராம்ஜி வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டான்சிங், ராஜேஷ் சவுத்ரி, ராம்ஜி, அஸ்வினி ஆகியோர் மலேகான் சுற்றுவட்டார பகுதிகளில் சர்வே நடத்தியுள்ளனர். பாபா கப்ருஸ்தானில் ஹாமிதியா மஸ்ஜிதை குண்டுவைக்க டான்சிங் தேர்வுச் செய்துள்ளான். ராம்ஜியும், அஸ்வினி சவுகானும் குண்டுவைக்க மோட்டார் சைக்கிள்களை வாங்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் குண்டுவைத்தது ராம்ஜி ஆவான். மஸ்ஜிதில் உள்ள ஒரு மரத்தில் இன்னொரு குண்டை தொங்கவிட்டுவிட்டு ராம்ஜி இடத்தை காலிச் செய்துள்ளான். டான்சிங் மஸ்ஜிதுக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளான். சவுத்ரி மோட்டார் சைக்கிளில் தொழுகைக்காக அணியும் தொப்பியை தொங்கவிட்டுள்ளான். இக்கும்பல் பின்னர் இந்தூருக்கு திரும்பியது.
மலேகானில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பிறகு சேகரித்த வெடிப்பொருட்களின் ஃபாரன்சிக் ரிப்போர்டும், டான்சிங் குறிப்பிட்ட வெடிப்பொருளும் ஒன்று தான் என்று என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. குண்டுவெடிப்புகளுக்கு பிறகு வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள ஆசிரமங்களில் வகுப்புகள் நடத்தி காலத்தை ஓட்டியுள்ளனர் சவுத்ரியும், டான்சிங்கும்.
அயோத்தியில் உள்ள சீதாராம்தாஸ் ஆசிரமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக