வியாழன், ஜனவரி 03, 2013

பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மரணமடைந்த மாணவியின் பெயர் சூட்டப்படாது !

டெல்லி.: மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியிருந்த நிலையில், அப்படி தனி நபரின் பெயர்களை சட்டத்திற்கு வைக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயதான பிசியோதெரப்பி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து சாலையில் தூக்கிப் போட்டுச் சென்றது 6 பேர் கொண்ட கும்பல். கடும் காயங்களுக்கு ஆளான அப்பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் வைத்து சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி தனி நபரின் பெயர்களை சட்டத்திற்கு வைக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் எந்த ஒரு சட்டத்துக்கும் தனிநபரின் பெயர் வைக்கப்பட்டதில்லை. தேசிய அளவிலேயே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற சட்டம் உருவாக அந்த மாணவி இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அவளது பெயரை சட்டத்துக்கு சூட்ட இயலாது என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக