ரமல்லா: கடந்த திங்கட்கிழமை (09.04.2012) ரமல்லா பிராந்தியத்தின் நிலின் கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுப் பலஸ்தீன் சிறுவன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளான்.
தனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பாதைத்தடை அருகில் வைத்து சிறுவனைப் பிடித்து வைத்துக்கொண்ட ஆக்கிரமிப்புச் சிப்பாய்கள், அவனை அடித்து உதைத்துப் பலவாறு இம்சித்தபின் இராணுவ வாகனத்தில் பலவந்தமாய் கடத்திச் சென்றதாக உள்ளூர்வாசிகள் தகவல்
தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு ஆக்கிரமிப்பு இராணுவத் தரப்பில் இதுவரை எந்தவிதமான காரணமும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சிறுவன் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், அவனுடைய தற்போதைய நிலை முதலானவை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
அண்மைக் காலமாக பலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் அடிக்கடி கடத்திச் செல்லப்பட்டு வதைமுகாம்களில் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பலஸ்தீன் மக்களின் வருங்காலத் தலைமுறையையும் குறிவைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் முன்னெடுத்துவரும் அராஜகங்கள் சர்வதேச மனித விழுமியங்கள் அனைத்துக்கும் எதிரானது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்ற போதிலும், நாளுக்கு நாள் இஸ்ரேலின் இத்தகைய அடாவடித்தனங்கள் பெருகிவருவது குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மிகுந்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக