திருநெல்வேலி: நெல்லை மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 4 சிறைவாசிகளின் குடும்பத்திற்கு 40 ஆயிரம் மனிதாபிமான உதவி செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
இதுபற்றி கூறப் படுவதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை புரிந்தார். அவரை அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள குடும்பங்களைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சுமார் 100 பேர் சந்தித்து மனு அளித்து முறையீடு செய்தனர். நடந்த விஷயங்களை விவரமாக கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
எதிர்வரும் மே 11-ம் தேதியன்று சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப், பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உட்பட கேரள அமைச்சர்கள், அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுமாக 125 பேர் கலந்து கொள்கின்றனர். இக் கூட்டத்தில் மிகமுக்கியப் பிரச்சினையாக சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் நிரபராதிகள் விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்வது? என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாங்கள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின்படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தாக்கீது பிறப்பித்தது. அதில், நீண்ட காலம் சிறைவாசிகளாக உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும் அல்லது அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்கும், 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட நீதிபதியைக் கொண்டு ஆய்வு நடத்தி விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்தாததால் கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஏற்கனவே உள்ள விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் கோரி வரும் நேரத்தில் தற்போது புதிதாக முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல் துறை கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்றோ, தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றோ சொல்லக்கூடியவர்கள் அல்ல நாங்கள். ஆனால், பழிவாங்கும் உணர்வோடு சிறையிலிருந்து வெளிவந்தவர்களை கைதுசெய்வதும், அவர்களை குண்டுவெடிப்பில் இணைப்பதும் அவர்களுடைய தாயார், மனைவி, மக்கள் கூட அவர்களை சந்திக்க அனுமதி மறுப்பதும் என்ன நியாயம்?
கர்நாடகத் தேர்தலும் குண்டு வெடிப்புகளும் :
கர்நாடகத்தில் பா.ஜ.க. கட்சி ஆளுகிறது. அம் மாநிலத்தில் மேமாதம் 5-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநேரத்தில் இந்த குண்டு வெடிப்புசம்பவம் யாருக்கு சாதகம்? என்பது உங்களுக்கே தெரியும்.ஆனால், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புரியாத புதிராக உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என ஒட்டு மொத்த மேலப்பாளையம் ஊரே சொல்கிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ளன. குண்டுவெடிப்பு வழக்கைதவிர நாகர்கோவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் மேலப்பாளையம் பள்ளியில் தொழுது கொண்டிருந்ததை ஜமாஅத்தார் அனைவருமே பார்த்துள்ளனர். அப்படியானால், அதே நேரத்தில் அந்த நபர் அந்த தாக்குதல் சம்பவத்தில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும்? அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்ததாக சொல்கிறார்கள். மிரட்டி துன்புறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றங்களே ஏற்றுக் கொள்வதில்லை.
மரக்காணம்கலவரத்தில் நிதானம்!
இப்போது நான் கேட்பதெல்லாம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணத்தில் சாதி மோதல் நடைபெற்றுள்ளது. இதில் மிகுந்த நிதானத்தை கடைபிடித்த தமிழக காவல்துறை மேலப்பாளையம் முஸ்லிம்களை கைது செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்படாமல், கைது செய்யப்படுபவர்கள் உண்மையிலேயே இக் குற்றத்தை செய்திருப்பார்களா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து அந்த ஆய்வுக்குப் பின்னர் இன்னொரு மாநிலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏனெனில் கர்நாடகத்தை ஆளும் பி.ஜே.பி. முஸ்லிம்கள் விஷயத்தில் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள்? என்பது நாடறிந்த விஷயம். பீகார், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங்களில் பல முறை குண்டுகள் வெடித்திருக்கின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற குண்டு வெடிப்புகளில் எந்த முஸ்லிம் அமைப்புகளின் அலுவலகங்களிலும் வெடித்தது இல்லை. எனவே, குண்டுகளை யார் கையாளுகிறார்கள் - அவைகள் எங்கே பதுக்கப்படுகின்றன என்பதை அறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டு வெடிப்பு நடந்தபோதெல்லாம் முஸ்லிம்கள் மீது இப்படித்தான் குற்றம் சுமத்தப்பட்டது. பாட்லா குண்டுவெடிப்பு,டெல்லி போலி என்கவுண்ட்டர் சம்பவங்களை தொடர்ந்து நானும், இ.அஹமது சாஹிபும், சோனியா காந்தியையும், பிரதமரையும், அன்றைய உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். அதன் பலனாகவே, மாலேகான் சம்ஜவுதா, அஜ்மீர், ஹைதராபாத், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்துத்துவ அமைப்புகளை சார்ந்தவர்களும், இந்து துறவிகளும் அதில் ஈடுபட்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, நேர்மையாக விசாரித்தால் நீதி கிடைக்கும். நிருபர்களாகிய உங்கள் முன்னேதான், கைதானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இத்தனை பெண்களும் எங்களிடத்தில் கண்ணீருடன் முறையிட்டிருந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தீர்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று உறுதிபடக் கூறினார்கள். எனவே, கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை அவர்களின் குடும்பத்தார்கள் உடனடியாக சந்திப்பதற்கு அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும். இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவரும் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கைதான நால்வரின் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் சார்பில் ரூ.40 ஆயிரம் உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.
கலந்து கொண்டோர்:
செய்தியாளர்கள் கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரா முகைதீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டபத்து முஹம்மதலி, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் தென்காசி எம்.முஹம்மது அலி, தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் காஹிரா கேஸ் ஏஜென்ஸி ஏ.கே.மஹ்மூது சுலைமான், நெல்லை மாவட்ட துணைத் தலைவர் பேட்டை திவான் முகைதீன், மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் மொய்தீன் அப்துல் காதர், மேலப்பாளையம் நகர பொருளாளர் அப்துல் ஜப்பார், அன்வர், மில்லத் காஜா, எம்.ஜி. காஜா, மாவட்ட துணைத் தலைவர் தென்காசி முஹிப்புல்லாஷா, கோடீஸ்வரன் நகர் பாட்டப்பத்து ஷேக் அலி, பாட்டப்பத்து முஹம்மது கடாபி, கரிக்கல் தோப்பு பஷீர், மாவட்ட துணைச் செயலாளர் பொட்டல்புதூர் அப்துல் காதர், மேலப்பாளையம் ஹாமீம்புரம் ஜி.தாஸிம், என். பாதுஷா, இம்தியாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக